சென்னை பெருங்குடியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தர் சந்தோஷ் குமாரின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் சச்சிதானந்தம், விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்குத் தகுதியான பேராசிரியர்கள் இந்தத் தேடுதல் குழுவிடம் 6 வார காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
பெறப்பட்ட விண்ணப்பங்களை தேடுதல் குழு பரிசீலனை செய்து, தகுதியான நபர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காகவும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வாசுகி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தீனபந்து உள்ளிட்ட 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் குழு தலைவர், உறுப்பினர், சிண்டிகேட் மற்றும் செனட் சார்பில் 3 பேர் என 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்முறையாக ஆளுநர் தரப்பில் பிரதிநிதி யாரும் இடம்பெறாமல் தேடுதல் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
The post அம்பேத்கர், தஞ்சை பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
