ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது: வரம்பை மீறி ரூ.100 எடுத்தாலும் ரூ.23 வசூல் செய்யப்படும்

சென்னை: ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கான கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏடிம்மில் வரம்பை மீறி ரூ.100 எடுத்தாலும் ரூ.23 வசூல் செய்யப்படும். பணம் இருப்பை பரிசோதித்தாலும் ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும். ஏடிஎம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகிறது. அவர்கள் அந்த கார்டை வைத்து பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன.
அதன்படி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது, ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை ஒரு மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் ஏ.டி.எம்ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி இதுவரை இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்த பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக வங்கிகள் வசூலித்து வந்தன. தற்போது இந்த கட்டணம் ரூ.23 ஆக அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு என்பது மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கணக்குகளில் மாதம் 5 பரிவர்த்தனை வரையில் கட்டணமின்றி ஏடிஎம் சேவையை பயன்படுத்த முடியும். இதே போல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கணக்கு இல்லாத மாற்று வங்கிகளின் ஏடிஎம் சேவையையும் இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த எண்ணிக்கை மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 3 பரிவர்த்தனை, மெட்ரோ அல்லாத நகரங்களில் மாதத்துக்கு 5 பரிவர்த்தனை என உள்ளது. இதை பயனர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்த முடியும்.

பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை சரிபார்த்தால் கூட, ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு இதற்கு கட்டணம் ரூ.6 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் தங்கள் தேவைக்கு ஏற்ப ரூ.100, ரூ.200 என்று ஏடிஎம்மில் பணம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த புதிய முறையின் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் பயன்படுத்துவதற்கான வரம்பை மீறி இனி அவர்கள் ரூ.100 எடுத்தாலும், ரூ.23 அபராதம் பணம் கட்ட வேண்டும். இதனால், அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது: வரம்பை மீறி ரூ.100 எடுத்தாலும் ரூ.23 வசூல் செய்யப்படும் appeared first on Dinakaran.

Related Stories: