சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற 9ம் தேதி வெளியிட உள்ள நிலையில் சென்னையில் சில முக்கிய தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் மே 9ம் தேதி தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளனர். தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்னரே மாணவ-மாணவிகள் தங்களுக்கான விருப்பக் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க தொடங்கி விடுவர். தமிழகம் பொருத்தவரை 171 அரசுக் கல்லூரிகள், 162 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 1233 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 1566 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
அதிலும் சில தனியார் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்க போட்டிகள் அதிகம் உள்ளது என்பதால், முன்கூட்டியே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வைப்பது வாடிக்கை ஆகிவிட்டது. அரசு கலை மற்றும் தனியார் கல்லூரிகள் பொருத்தவரை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை தொடங்குவர். ஆனால், சில சுயநிதி மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் பொருத்தளவில் தேர்வு முடிவுக்கு முன்னரே ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கி விடுவர். அதன்படி சென்னையில் சில தன்னாட்சி கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் வரவில்லை என்றாலும், பலரும் போட்டி போட்டு விண்ணப்பித்து வருவதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. சென்னை லயோலா மற்றும் எத்திராஜ் போன்ற கல்லூரிகள் மே 9ம் தேதிக்கு பிறகு விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை டிஜி வைஷ்ணவ் கல்லூரியை பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். வணிகவியல், கணித அறிவியல், டேட்டா சயின்ஸ், நிர்வாகம் சார்ந்த படிப்புகளுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அடிப்படை அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு மட்டும் சற்று குறைந்த அளவிலான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
The post மே 9ல் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகவுள்ள நிலையில் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.
