×

திருடிய ஆடுகளை விற்க வந்தவர் விபத்தில் சிக்கினார்

போச்சம்பள்ளி, ஏப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டகரம் செல்லும் வழியில், டூவீலர் ஒன்று சாலையில் சாக்குப்பை கட்டப்பட்டு விழுந்து கிடந்தது. அருகில் உள்ள புதருக்குள், ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அதனைக்கண்ட போலீசார், உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து நடந்த இடத்தில் கிடந்த சாக்குப்பையை அவிழ்த்து பார்த்த போது, அதில் 2 ஆடுகள் இருந்தது தெரியவந்தது.

விபத்தில் சிக்கிய நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தொப்படிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகம்(52) என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அந்த ஆடுகளை திருடிக் கொண்டு சாக்குப்பையில் கட்டி போச்சம்பள்ளி சந்தைக்கு எடுத்து வந்தபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இதையடுத்து, ஆடுகள் மற்றும் பைக்கை மீட்ட போலீசார் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ஆடுகள் எங்கு திருடப்பட்டது? யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய சண்முகம், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருடிய ஆடுகளை விற்க வந்தவர் விபத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Pochampally ,Inspector ,Nagalakshmi ,Pochampally, Krishnagiri district ,Katakaram ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை