நெல்லை : நெல்லை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளுக்கு முறப்பநாடு குடிநீர் திட்டம் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் சுகபுத்ரா தெரிவித்தார்.
நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மேயர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை மேயர் கேஆர் ராஜூ, கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைந்த போப் ஆண்டவர், காஷ்மீர், பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதே போல் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மேயர் பேசுகையில் ‘‘கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் பணிகளை செய்ய தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை கடிதமாக வழங்க வேண்டும். அனைத்து கவுன்சிலர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு கவுன்சிலரின் பெயரையும் நான் சொல்லும்போது எழுந்திருந்து தங்களது கோரிக்கைகளை தெரிவியுங்கள் என்றார். தொடர்ந்து விவாதம் நடந்தது.பாளை. மண்டல சேர்மன் பிரான்சிஸ்: கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கேடா திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை. எந்த நிலையில் இருக்கிறது. முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட திட்டம் கைவிடப்படுகிறதா?
மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா: முறப்பநாடு திட்டம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டருடன் நெல்லை மாவட்ட கலெக்டர் இணைந்து ஆய்வு செய்தார். அங்கிருந்து நெல்லைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு சில சிக்கல்கள் இருக்கிறது. இதனால் நெல்லை கலெக்டர் வேறு ஒரு திட்டத்தையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார். அத்திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதி பிரபு: மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருவிளக்குகள் பழுதானால் டென்டர் எடுத்தவர்கள் சரி செய்ய முன்வருவதில்லை. வண்ணார்பேட்டை பரணி நகரில் நீண்ட காலமாக சாலை போடப்படாமல் இருந்து வருகிறது. அங்கு விரைந்து சாலை அமைக்க வேண்டும் மண்டல சேர்மன் மகேஸ்வரி:
பேட்டை காந்தி நகர் பகுதியில் நிலத்தடி நீர் கிடையாது. அங்கு அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவே மக்கள் குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வருவதில்லை.
மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா: மேலப்பாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. அப்போது அந்த வார்டு 37வது வார்டாக இருந்தது.
அதன் பின்னர் வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரை அந்த மண்டபம் கட்டும் பணி முடிவடையவில்லை. தற்போது பாதியில் கிடக்கிறது. இது தொடர்பாக கேட்கும் போது ரூ.1.40 கோடி அந்த மண்டபத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இரண்டு மூன்று இடங்களில் அந்த மண்டபத்தை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. சம்பந்தப்பட்ட மண்டபம் அமையும் இடம் தற்போது எந்த வார்டில் இருக்கிறது? என்பதே தெரியவில்லை.
அவரது பேச்சுக்கு கவுன்சிலர் ரம்ஜான் அலி எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த மண்டபம் தொடர்பான பிரச்சனையை உரிய ஆய்வு செய்து அடுத்த கூட்டத்திற்குள் தீர்த்து வைக்க வேண்டும் என்றார். 5வது வார்டு ஜெகநாதன்: ரகுமத் நகர் 20வது தெரு பூங்காவில் 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் எரியவில்லை. குப்பை அள்ள வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் இல்லாததால் குப்பைகள் அதிகளவில் வார்டில் தேங்கியுள்ளது. வையாபுரி நகர், ஸ்ரீ தேவி நகர் பகுதிகளில் அனைத்து சாலைகளும் மோசமாக உள்ளன.
36வது வார்டு சின்னத்தாய் கிருஷ்ணன்: அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் முதல் சங்கர் காலனி வரையிலும், அன்னை இந்திராநகர் பகுதியிலும் விரைவில் தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.
51வது வார்டு சகாய ஜூலியட் மேரி: மகிழ்ச்சிநகர், கிருஷ்ணாநகர் மற்றும் டக்கரம்மாள்புரத்தில் 4,5 தெருக்களில் பிரதான குடிநீர் பகிர்மான குழாய் பதித்து தர வேண்டும்.
11வது வார்டு கந்தன்: வண்ணார்பேட்டையில் மாநகராட்சி பள்ளி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்கள் பொழுதுபோக்கு வசதிக்கு பூங்கா அமைக்க வேண்டும்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோகுல வாணி, ஆமினா சாதிக், சந்திரசேகர், உலகநாதன், ரசூல் மைதீன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசினர்.
அறிவிப்புகளை தமிழில் வெளியிட கோரிக்கை
கவுன்சிலர் பேச்சியம்மாள் கூட்டத்தில் பேசுகையில் ‘‘தமிழ்நாடு அரசு அனைத்து அறிவிப்புகளையும், அரசாணைகளிலும் தமிழில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நம் மாநகராட்சியிலும் அனைத்து அறிவிப்புகள் மற்றும் அரசாணைகளையும் தமிழில் தான் வெளியிட வேண்டும்’’ என்றார்.
தண்ணீர் பாட்டிலை வீசிய கவுன்சிலர்
கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, கவுன்சிலர் ரவீந்தர் எழுந்து, பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர், தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசி விட்டு வெளியேறினார். அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்ததால் அருகே இருந்த கவுன்சிலர்கள் மீது தண்ணீர் சிதறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
The post நெல்லை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளுக்கு முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வருவதில் சிக்கல் appeared first on Dinakaran.