உதகை: ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்ட 41 துணைவேந்தர்களில் 32 பேர் புறக்கணித்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று உதகையில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலை கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் மாநாடு நடைபெற உள்ளது. துணை குடியரசு தலைவர் கலந்து கொள்ள உள்ளார். கல்வி சார்ந்து பல்வேறு மேம்பாடுகள் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட இருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று உயர்கல்வி மேம்பாடு தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன. துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் சட்டம் நிறைவேற்றிய நிலையில், இன்றைய தினம் உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்கள் இல்லாத பல்கலை கழகங்களில் பொறுப்பு குழுவில் உள்ள பேராசிரியர்களும், பதிவாளர்களும் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இன்று உதகையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாட்டில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலை கழகத்திற்கு துணை வேந்தர்கள் இல்லாத நிலையில் அந்த பணியிடத்தில் உள்ள பொறுப்பு அதிகாரிகள் இன்று செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்கழக பொறுப்பு துணைவேந்தர் தமிழ்வேந்தன் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் அதே போல் துணை ஜனாதிபதி வேளாண் பல்கலை கழகத்திற்கு வர இருப்பதால் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை மேற்கொள்வதற்காக சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு குழுவிலிருந்தும் யாரும் மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் ஏற்கனவே கொடுத்துள்ள அழைப்பில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டுள்ளார். யாரும் பங்கேற்காத போது தான் எதற்கு பங்கேற்க வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தார். சொந்த காரணத்திற்காக வெளியூர் சென்றிருப்பதாகவும் மற்றவர்கள் வந்தால் தானும் மாநாட்டிற்கு செல்ல இருந்ததாகவும் கடைசி நேரத்தில் யாரும் வராத தகவல் கிடைத்ததால் தானும் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் தெரிவித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் உதகையில் நடைபெறும் இந்த துணைவேந்தர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் நீண்ட நாட்களாக இந்த பல்கலைக்கழக மேம்பாடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பொறுப்பு குழுவில் உள்ள அதிகாரிகள், பதிவாளர்கள் மற்றும் செனட் சார்ந்து இருக்கக்கூடிய நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள வில்லை என்று தகவல் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே உயர்கல்வித்துறையின் கீழ் துணை வேந்தர்கள் உள்ளனர். மற்ற பல்கலைகழகங்களில் முழுவதுமாக பதிவாளர்கள் மற்றும் பொறுப்பு துணைவேந்தர்கள், பொறுப்பு குழு ஆகியவை மட்டுமே நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில், துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பல அதிகாரிகள் இன்றையதினம் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியது. மேலும், ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற 9 பேரும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆவர். அழைப்பு விடுக்கப்பட்ட 41 துணைவேந்தர்களில் 32 பேர் புறக்கணித்தனர்.
The post உதகையில் ஆளுநர் கூட்டிய மாநாடு: பல்கலைக்கழக துணைவேந்தர்களில் 32 பேர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.