காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை தமிழ்நாட்டுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்தல்; குழு ஒருங்கிணைப்பாளராக வைகோ தேர்வு

மதுரை: ரயில்வே வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென எம்பிக்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் எம்பிக்கள் குழு ஒருங்கிணைப்பாளராக வைகோ தேர்வானார். தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் ரயில்வே துறையின் சேவைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மதுரை தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்பிக்களான கொடிக்குன்னில் சுரேஷ் (மாவேலிக்கரை), வைகோ (மாநிலங்களவை), மாணிக்கம் தாகூர்(விருதுநகர்), சு.வெங்கடேசன்(மதுரை), ராபர்ட் புரூஸ்(நெல்லை), டாக்டர் ராணி ஸ்ரீகுமார்(தென்காசி), தங்க தமிழ்செல்வன்( தேனி), துரை வைகோ(திருச்சி), சச்சிதானந்தம்(திண்டுக்கல்), முகம்மது அப்துல்லா (மாநிலங்களவை), ஆர்.தர்மர்( மாநிலங்களவை) ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
* மதுரை கோட்ட ரயில்வே காலிப்பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.
* விருதுநகர்-செங்கோட்டை இடையே அகல ரயில்பாதை பணியின்போது கரிவலம் வந்த நல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதில், கரிவலம்வந்த நல்லூர் ரயில்நிலையத்தை செயல்படுத்த வேண்டும்.
* திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரயில் பாதை பணி நிறைவடைந்துள்ள நிலையில், கோவில்பட்டி – திண்டுக்கல் இடையே 4 ஜோடி மெமு ரயில்களை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கும் என்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பயனடைவர்.
* மதுரை-கோவை இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவில் அகல பாதை பணிக்கு ரயில்வே துறை சுமார் ரூ.750 கோடி செலவிட்டது. ஆனால், இந்தப் பிரிவில் ஒரே ஒரு ரயில் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. மீட்டர் கேஜ் பாதையின்போது மதுரை-கோவை இடையே 5 ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே, ராமேஸ்வரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக கோயம்புத்தூருக்கு கூடுதல் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எம்பிக்கள் வலியுறுத்தினார். கூட்டத்தில், மதுரை கோட்ட ரயில்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

The post காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை தமிழ்நாட்டுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்தல்; குழு ஒருங்கிணைப்பாளராக வைகோ தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: