காஷ்மீர் மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். நேற்றையதினம் அங்கு பைசாரன் என்ற மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும். பயங்கரவாத-தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்தத் தாக்குதலில் இதுவரை மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்குக் கிடைத்தவுடன் உடனடியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு உத்தரவிட்டேன்.
இச்சம்பவம் குறித்து பொது மக்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிய உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 ( லேண்ட்லைன்), 9289516712 (மொபைல் நம்பர் மற்றும் வாட்ஸ்அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையரை இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டேன். காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவியைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017ம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை.
இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட அமைதி அஞ்சலியைச் செலுத்த தங்களது மேலான அனுமதியைக் கோருகிறேன் என்று கூறினார். முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, செல்வபெருந்தகை(காங்கிரஸ்), அருள்(பாமக), நயினார் நாகேந்திரன்(பாஜக) முகமது ஷாநவாஸ்(விசிக), நாகைமாலி(மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார்(மதிமுக), ஜவாஹிருல்லா(மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன்(கொமதேக), பூவை ஜெகன் மூர்த்தி(புரட்சி பாரதம்), வேல்முருகன்(தவாக), என அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர்.
இறுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
* பேரவையில் இன்று
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து உயர் கல்வித் துறை, பள்ளி கல்வித் துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பதில் அளித்து பேசி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.
The post ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் appeared first on Dinakaran.