யார் ஆட்சியில் மின் கட்டண உயர்வு; திமுக-அதிமுக காரசார விவாதம்; இந்தியாவிலேயே 99.97 சதவீதம் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்ட முன்னணி மாநிலம் தமிழ்நாடு: பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

இந்தியாவிலேயே 99.97 சதவீதம் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்ட முன்னணி மாநிலம் தமிழ்நாடு தான் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி செந்தில்குமார் (அதிமுக) பேசியதாவது: ஸ்மார்ட் மீட்டர்களே தனியாரே பராமரிப்பதாக செய்தி வருகிறது. அப்படியென்றால், தனியாரை ஊக்குவித்து வாரியத்திற்கு ஊழியர்களைக் குறைத்து படிப்படியாக தனியாருக்கு கொடுக்க இந்த அரசு முயற்சிக்கிறதா?.

அமைச்சர் செந்தில் பாலாஜி: ஒரு தவறான கருத்தை முன்வைக்க வேண்டாம். தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாருக்கு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. ஸ்மார்ட் மீட்டர் உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? செயல்படுத்த வேண்டுமா, வேண்டாமா? என்பதை ஒரே கருத்தில் பதில் சொல்லுங்கள். அரசியலுக்காக சில நேரங்களில், இதுபோன்ற கருத்துகளை தவறாக மக்களிடத்திலே எடுத்து செல்வதற்கு நீங்கள் தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம். அதிமுக ஆட்சியில் மின் கட்டணமே உயர்த்தப்படவில்லை என்பதைப்போல ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள். நீங்கள் ஒட்டுமொத்தமாக 52.9 சதவீதம் உயர்த்திவிட்டு அதிமுக ஆட்சியில் மின் கட்டணமே உயர்த்தவில்லை என்பது போலவும், திமுக ஆட்சியில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றீர்கள்.

செந்தில்குமார்: தடையில்லா மின்சாரம் வழங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி. ஆனால் உங்கள் ஆட்சி வந்தால் மின்வெட்டு என்றுதான் மக்கள் சாதாரணமாக நினைக்கிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: உங்கள் தொகுதியில் மின் வெட்டு இருக்கிறதா, சொல்லுங்கள்? இந்தியாவில், 99.97 சதவீதம் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்ட முன்னணி மாநிலம் தமிழ்நாடு. வேறு எந்த மாநிலமும் இந்த அளவிற்கு மின்சார வினியோகத்தை முழுமையாக வழங்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

The post யார் ஆட்சியில் மின் கட்டண உயர்வு; திமுக-அதிமுக காரசார விவாதம்; இந்தியாவிலேயே 99.97 சதவீதம் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்ட முன்னணி மாநிலம் தமிழ்நாடு: பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: