போலீசார் தாக்கியதால் மீனவர் தற்கொலை: தூத்துக்குடியில் உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் ஆனந்த சைரஸ் (47). மீனவரான இவர் குடும்பத்தினருடன் ராஜகோபால் நகரில் வசித்து வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கருப்பசாமிக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த 19ம்தேதி இரவும் தகராறு ஏற்பட்டதாம். இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் 3 பேர் ஆனந்த சைரஸ் வீட்டுக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அப்பகுதி மக்கள் முன்பாக ஆனந்த சைரசை தாக்கியதோடு அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ஆனந்த சைரஸ் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் பதறிய போலீசார் உடனடியாக தீயை அணைத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த குடும்பத்தினர் உரிய நிவாரணம் வழங்ககோரி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆனந்த சைரசின் மனைவி சரோபினா கூறுகையில் ‘‘கணவர் தற்கொலைக்கு காரணமான 3 போலீசார் மீது நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post போலீசார் தாக்கியதால் மீனவர் தற்கொலை: தூத்துக்குடியில் உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: