சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில் இசை வேளாளர் என்பதை ஆங்கிலத்தில் இசை வெள்ளாளர் என இருப்பதால் அதனடிப்படையில் குறிப்பிட்டுச் சாதிச் சான்றிதழ் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள் இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என மனுதாரருக்குக் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் பாதிப்பில்லை என்றாலும், ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும், சாதிச் சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது என வாதிட்டார்.

இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது; ‘சாதி சான்றிதழ்களை வழங்கும் போது தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப் பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும். சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: