நாமக்கல் : நாமக்கல் அருகே, திருமணிமுத்தாற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கூடச்சேரியில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றின் மீது பல ஆண்டுகளுக்கு முன் குழாய் பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தது.
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், இந்த குழாய் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று பாதை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படும். இதனால் மாவுரெட்டியில் இருந்து எஸ்.புதுப்பாளையம் செல்ல பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், நாமக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்த பணிகளை நேற்று சேலம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். தற்போது உயர்மட்ட பாலம் 60 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்படுகிறது.
இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, அனைத்து வகை வாகனங்களும் பாலத்தில் சென்று வர முடியும். பருவமழை காலத்திலும், இந்த பாலம் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார். ஆய்வின் போது, நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி பொறியாளர்கள் கைலாசம், கவின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post திருமணிமுத்தாற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி appeared first on Dinakaran.