உடுமலை அருகே துப்பாக்கி தொழிற்சாலை இயங்கியது வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தகவல்

*கட்டப்பொம்மன், மருது சகோதரர்களுக்கு சப்ளை

உடுமலை : உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுப் பணிகளில் மிகுந்த சிரத்தை எடுத்து களப்பணிகள் மேற்கொண்டு ஆவணப்படுத்தி வருகின்றனர்.இந்த களப்பணிகளில் உடுமலை பகுதிகளான பண்ணைக்கிணறு, ஜிலேப்பநாயக்கன்பாளையம், திருமூர்த்திமலை, புதுப்பாளையம், நல்லாம் பள்ளி,துங்காவி, மெட்ராத்தி, கடத்தூர், காரத்தொழுவு போன்ற பகுதிகளில் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற சிற்பங்கள் இருக்கின்றன.

இதை நீண்ட நாட்களாக ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் தளிஞ்சி பகுதியில் துப்பாக்கி தொழிற்சாலை இருந்ததாகவும், அதன் எச்சங்களாகவே இந்தத் துப்பாக்கி புடைப்புச் சிற்பங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

உடுமலை பகுதியில் தளி எத்தலப்ப மன்னர் ஆட்சி செய்தமைக்கான அசைக்க முடியாத சான்றுகள் இருந்தாலும், 1800 கால கட்டங் களில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், மருது சகோதரர்களுக்கும் இங்கிருந்துதான் துவக்கு எனப்படும் துப்பாக்கிகள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் திருமூர்த்திமலை, ஏழுமலையான் கோவில் கொங்கலக்குறிச்சி போன்ற பகுதிகளில் எத்தலப்ப மன்னருக்கு இன்று வரையிலும் முதல் மரியாதை கொடுக்கும் வகையில் பூசைகள் நடைபெற்று வருகிறது.இந்த துப்பாக்கி புடைப்புச் சிற்பங்களைக் கடந்த 15 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆய்வு செய்த உடுமலை வரலாற்று ஆய்வாளர்கள் சென்னை ஆவணக்காப்பகத்தில் சான்றுகளைத் தேடி வருகின்றனர்.

கிடைத்த சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது விருப்பாட்சி கோபால நாயக்கர் தலைமையில் இயங்கிவந்த தீபகற்பக் கூட்டணியால் ஆங்கிலேய அரசுக்கு ஆயுதம் சார்ந்த நெருக்கடி கொடுக்கப்பட்டதும், அது இந்த துவக்கு எனப்படும் துப்பாக்கி தொழிற்சாலை தளிஞ்சி மலைப்பகுதியில் இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.

மேலும், இங்கு இந்த ஆயுதக்கருவி இருந்ததால் தான் அதிகளவில் ஆங்கிலேயத் துருப்புகள், எனும் படைக் கம்பெனிகள் நிரந்தரமாகத் தங்கியிருந்த காரணத்தின் எச்சமே அமராவதி நகரில் படைத்துறைப்பள்ளி எனும் ராணுவப் பள்ளி அமையக் காரணமாக இருக்கலாம் என தளி பகுதி காவல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், யூகங்களின் அடிப்படையில் பின்னணியில் ஆராய்ச்சி செய்யாமல் களத்தரவுகளில் ஆய்வு செய்யும் போது கரிக்காரன்புதூர், நெய்க்காரபட்டி சித்தரேவு, காவளப்பட்டி, பாப்பம்பட்டி பகுதியில் நுணுக்கமான இரும்புப் பட்டறை தொழிற்சாலைகள் இயங்கி வந்ததும்,கடந்த நூற்றாண்டுகள் முன்பு வரை துப்பாக்கித் தொழிற்சாலை இருந்ததையும்,ஒரு ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன்பு வரை உடுமலையில் அனுமதிக்கப்பட்ட துப்பாக்கித் தொழிற்சாலை இருந்ததையும் நாம் நினைவு கூறலாம் எனஉடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திற்கான கள ஆய்வாளர்கள் மூர்த்தீஸ்வரி, அருட்செல்வன், சிவக்குமார், மதியழகன் ஆகியோர் தரவுகளில் உறுதி செய்தனர்.

The post உடுமலை அருகே துப்பாக்கி தொழிற்சாலை இயங்கியது வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: