தங்கம் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை தாண்டி வரலாற்று உச்சம்: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 9ம் தேதி ஒரு  பவுன் ரூ.67,280க்கு விற்பனையானது. தொடர்ந்து 10ம் தேதி பவுன் ரூ.68,480, 11ம் தேதி  ரூ.69,960 என்று விற்பனையானது. 12ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை கடந்து, புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.70,160க்கு விற்பனையானது. இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில்  அதிப்பட்ச விலையாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 15ம் தேதி தங்கம் விலை குறைந்து  ஒரு பவுன் ரூ.69,760க்கும் விற்பனையானது.

அதன் பிறகு 16ம் தேதி தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,520 ஆகவும், 17ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன்  ரூ.71,360 ஆகவும் உயர்ந்தது. இந்த அதிரடி விலை உயர்வால் நகை வாங்குவோர்  கடும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர். தொடர்ந்து 18ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,560க்கு விற்பனையானது. அதே  நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தையும் தொட்டது. 19ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பவுன் ரூ.71,560க்கு விற்கப்பட்டது. 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,120க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் மற்றும் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் 6 நாட்களாக மாற்றமின்றி விற்பனையான  வெள்ளி விலை நேற்று உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு  கிராம் வெள்ளி ரூ.111க்கும்,  கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார்  வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவது குறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்கா-சீனா இடையில் நடந்து வரும் வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை வர்த்தக போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் தங்கம் தான் நல்ல முதலீடு என்று நினைத்து மக்கள் நாணயத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனால், தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இல்லை. விரைவில் ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொடுவதற்கு வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அமெரிக்கா- சீனா இடையேயான பரஸ்பர வரி விதிப்பு குறைக்கப்படாத பட்சத்தில் தங்கம் விலை இன்னும் கடுமையாக உயரக்கூடும். ஆண்டு இறுதிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுதற்கு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தங்கம் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை தாண்டி வரலாற்று உச்சம்: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: