போப் பிரான்சிஸ் மறைவு சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் உழைத்தவர்: தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோன்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ (மதிமுக): உலகெங்கிலும் வாழ்கிற கோடான கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி மிகப்பெரும் துக்கத்தை தருகிறது. 12 ஆண்டுகள் வாடிகன் திருச்சபைக்கு தலைவராக இருந்த போப்பரசர், உலகில் சாதி மதங்களால் எந்த இரத்தக் களறியும் ஏற்படக்கூடாது என்றும், சமாதானம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருள்மொழி வழங்கிய போப்பரசரின் மறைவு அனைத்து தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

நயினார் நாகேந்திரன் (பாஜ): உலக கத்தோலிக்க திருச்சபையின் 266ம் திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மிக சேவைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்த போப் ஆண்டவரின் புனித ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சற்று இளைப்பாறட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக): உலக மக்களிடம் எல்லையில்லாத அன்பும், கருணையும் காட்டிய கத்தோலிக்க மக்களின் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குருவாக 12 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ், கிறிஸ்தவ மக்களையும் கடந்து உலகில் அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்ட மனிதராக திகழ்ந்தார். சமயத்தை கடந்து நல்லிணக்கம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்டவர். அவரது மறைவு உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அன்புமணி (பாமக): கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட போப் பிரான்சிஸ், தமது 12 ஆண்டு பதவிக்காலத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டவர். போப் பிரான்சிசை இழந்து வாடும் கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் சோகத்தின் நானும் பங்கு கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நல குறைவால் காலமானார் என்ன செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் உலக சமாதானத்திற்கும், அமைதிக்கும் பாடுபட்டவர். சிறந்த மனித நேயர். ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயரவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவும் பாடுப்பட்டவர். அவரது இழப்பு உலகிற்கும், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

* மனிதநேயத்தில் நிலைகொண்ட மதநம்பிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பரிவோடும், முற்போக்கு கொள்கைகளோடும் கத்தோலிக்க திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். போப் பிரான்சிஸ் இரக்கமிகுந்தவராக, முற்போக்கு குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத் தந்தன. இரக்கமிகுந்த செயல்கள், மனிதநேயத்தில் நிலைகொண்ட மதநம்பிக்கை எனும் வளமான மரபினை அவர் விட்டுச் சென்றுள்ளார். அன்னாரது மறைவினால் தவிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post போப் பிரான்சிஸ் மறைவு சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் உழைத்தவர்: தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: