நெல்லியாளம் நகராட்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே மரத்தை போட்டு கிராம மக்கள் பயணம்

* அகலமாக பாலம் அமைக்க கோரிக்கை

* நகரமன்ற தலைவர், அதிகாரிகள் சமரசம்

கூடலூர் : நெல்லியாளம் நகராட்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள மரத்தின் மீது ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 14, 15வது வார்டு ஆமைக்குளம் புளியம்பாறை இடையே ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் அகலத்தை அதிகரிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, துணைத் தலைவர் மற்றும் 15வது வார்டு உறுப்பினர் நாகராஜ் மற்றும் தேவாலா காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி பகுதியில் 15 வது வார்டு ஆமைக்குளம் பகுதியில் உள்ள அரசு கல்லூரி பகுதியில் இருந்து 4-வது வார்டு புளியம்பாறை பகுதிக்கு இடையே தினசரி ஏராளமான மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

புளியம்பாறையில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இதேபோல புளியம்பாறை பகுதியில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். மேலும் தினசரி வேலைகளுக்காக செல்லும் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.

இந்த பாதையில் புலியம்பாறை ஆமைக்குளம் இடையே குறுக்காக செல்லும் பாண்டியாற்றின் கிளை ஆற்றின் மீது பாலம் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மாணவர்கள், பொதுமக்கள் மரப்பாலம் பகுதிக்கு வந்து மீண்டும் இருபுறமும் பயணிக்க வேண்டி உள்ளது.

ஏற்கனவே ஆற்றின் மீது மரத்தை போட்டு அதன் மீது பொதுமக்கள் நடந்து சென்ற நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நெல்லியாளம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தற்காலிக இரும்பு பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீண்டும் ஆற்றின் குறுக்கே மரத்தை போட்டு அதன் மீது பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். சிறுவர்கள், பெண்கள் ஆற்றில் இறங்கி நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் இப்பகுதியில் பாலம் அமைக்க ரூ.30 நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பணியை வனத்துறை தான் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய வனத்துறையினர் இதற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 4 அடி அகலத்தில் சிமெண்ட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.பாலம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த சனிக்கிழமை பூமி பூஜை போடும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

அப்போது, இதையறிந்த அங்குள்ள பழங்குடி மக்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டனர். புளியம்பாறை ஆமைக்குளம் இடையே ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் இந்த பாதையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலம் வலுவாக அமைய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் மழைக்காலத்திலும் பாதுகாப்பாக சென்று வரும் வகையிலும், பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும், அதே நேரத்தில் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையிலும் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, துணைத் தலைவர் மற்றும் 15வது வார்டு உறுப்பினர் நாகராஜ் மற்றும் தேவாலா காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் நெல்லியாளம் சுற்று வட்டார பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நெல்லியாளம் நகராட்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே மரத்தை போட்டு கிராம மக்கள் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: