வார விடுமுறை நாளில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி : ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட துவங்கிய நிலையில் வார விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக நீலகிரி விளங்கி வருகிறது.

இங்கு ஆண்டு முழுவதும் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும்.

இந்த விடுமுறையை கொண்டாடவும், அதே சமயம் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியை முற்றுகையிடுவது வாடிக்கை.

ஊட்டியில் தற்போது நடப்பு ஆண்டிற்கான கோடை சீசன் களை கட்ட துவங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஓரிரு நாட்களில் கோடை விடுமுறை விடப்படும் என்பதால், மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி சமவெளி பகுதிகளில் ெவயில் சுட்டெரித்து வருகிறது.

இதனால் தற்போது முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கணிசமான அளவிற்கு காணப்படுகிறது. அதற்கேற்ப மே மாதத்தில் நடத்தப்பட உள்ள கோடை விழா தேதிகள் முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊட்டி வர இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளதால், இ-பாஸ் விண்ணப்பித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டியில் குளு குளு ரம்மியமான காலநிலை நிலவுகிறது.

இதனை அனுபவித்தபடியே சுற்றுலா தலங்களை பார்த்து ரசிகின்றனர். குறிப்பாக ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தம்பதியர் சகிதமாக, 4 பேர் கொண்ட குடும்பமாக வந்தவர்கள் மிதிப்படகுகளில் சவாரி செய்தனர். டூரிஸ்ட் பஸ்களில் டூர் வந்தவர்கள் மொத்தமாக மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஊட்டி வர்க்கி, நீலகிரி தைலம், ஹோம்மேட் சாக்லேட் உள்ளிட்டவற்றை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக கமர்சியல் சாலையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

அதிகளவில் வாகனங்கள் வந்த நிலையில் நகரில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல்துறையினர் உடனுக்குடன் சீரமைத்தனர். மேலும் போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சர்க்யூட் பஸ்களும் இயக்கப்பட்டன.

ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், ஊசிமலை பகுதிகளையும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

The post வார விடுமுறை நாளில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: