கொடிவேரி அணையில் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

*கொளுத்தும் வெயிலுக்கு இதமான குளியல்

கோபி : கொளுத்தும் வெயிலுக்கு இதமான குளியல் போட கொடிவேரி அணைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.

சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கும் கோடை வெயில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே தாக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலுக்கு இதமான குளியல் போட கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதியது. அருவிபோல் கொட்டிய தண்ணீரில் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். நேற்று மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அணைக்கு வந்திருந்தனர். இதனால் அருவியில் குளிக்க இடமில்லாமல் பல சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.

சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் பெண்களும் உற்சாகமாக விளையாடி, மணல் பரப்பில் அமர்ந்தும் விடுமுறையை உற்சாகமாக களித்தனர். பரிசல் பயணத்தை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக லைப் ஜாக்கெட் அணிந்த பிறகே பரிசலில் ஏற்ற வேண்டும் என பொதுப்பணித்துறையினர் உத்தரவிட்டு உள்ளனர்.

ஆனால் பரிசல் ஓட்டிகள் லைப் ஜாக்கெட் அணியாமலேயே சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக பரிசல் பயணம் நிறுத்தப்பட்டது. இதனால் பரிசல் பயணத்தை எதிர்பார்த்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். எனவே லைப் ஜாக்கெட் அணிந்து உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பரிசலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கொடிவேரி அணையில் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: