அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் மீது ஏவுவது ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல்: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்

சென்னை: அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஒன்றிய பாஜஅரசு ஏவி விடுவது-ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய பாஜஅரசின் மக்கள் விரோத திட்டங்களை-தோல்விகளை-மக்களிடம் எடுத்துச் செல்கின்ற காங்கிரஸ் கட்சியைப் பார்த்து பாஜமிரட்சியில் இருக்கிறது. அதனால்தான் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. இப்போது அதன் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை.

காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சலற்ற ஒன்றிய பாஜ அரசு, இப்படி அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஏவி விடுவது-ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் மட்டுமல்ல! யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத வெட்கி தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயலாகும்!

ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமலாக்கத்துறையைத் தனது கூட்டணிக் கட்சியாகச் சேர்த்துக் கொண்டு இப்படி பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒன்றிய அரசு இனிமேலாவது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல – எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாகவே சந்திக்கும் துணிச்சலைப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் மீது ஏவுவது ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல்: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: