மல்லை சத்யாவுடனான மோதல் முடிவுக்கு வந்தது ராஜினாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ: வைகோ பரபரப்பு பேட்டி

சென்னை: கட்சி பதவியில் இருந்து விலகல் முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ. குடும்பத்தில் நடந்த பிரச்னை இது. நீரடித்து நீர் விலகாது என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், “துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது” என்று பேசினர்.

இதனிடையே நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிர்வாக குழுக் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நிர்வாகிகளின் வலியுறுத்தலையடுத்து துரை வைகோ ராஜினாமாவை வாபஸ் பெற்றார். முன்னதாக துரை வைகோவின் பதவி விலகலை தலைமை ஏற்கவில்லை. மதிமுக தீர்மான அறிக்கையில் முதன்மை செயலாளர் துரை வைகோ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து வைகோ அளித்த பேட்டி:

துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் திடீரென தலையெடுத்தது. இதைப்பற்றி பலரும் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு கருத்துக்களை போட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் மல்லை சத்யாவும், துரை வைகோவும் மனம் விட்டு பேசினார்கள். இதுபோன்ற சூழ்நிலை இனி ஏற்படாது. அதற்கு நான் ஒரு போதும் இடம் கொடுப்பது இல்லை என்று உறுதிமொழி கொடுத்து இதை துரை வைகோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

துரை வைகோ அதனை ஏற்றுக்கொண்டு, ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டுமல்ல, நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவகைகளாக இருக்கட்டும் என்று கூறினர். சத்யா கூறியதை தொடர்ந்து நான் எடுத்த முடிவை திரும்ப பெறுகிறேன் என்று துரை வைகோ கூறினார். வக்பு மசோதாவை நிறைவேற்றிய மோடி அரசுக்கு எதிராக, மோடி அரசை கண்டித்து வருகிற 26ம் தேதி சென்னையில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நானும், துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யாவும், செஞ்சி ஏ.கே.மணியும் கலந்து கொள்வோம். மதுரையில் முதன்மை செயலாளர் துரை வைகோவும், பூமிநாதன் எம்எல்வும், துணை பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கோவையில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபனும் கலந்து கொள்வார்கள். மதிமுக பொதுக்குழு ஜூன் மாதத்தில் நடைபெறும். தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் வாழ்விற்கு உறுதுணையாக இருப்பேன்: முதன்மை செயலாளர் துரைவைகோ அளித்த பேட்டியில், “இயக்க நலன், இயக்க தந்தை நலன் தான் முக்கியம். இயக்கம் கட்டுக்கோப்பாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் பயணம் மல்லை சத்யாவை பொறுத்தவரைக்கும், சில நிகழ்வுகளை பொறுத்தவரைக்கும் நான் கொண்டு மற்றவர்கள் குற்றச்சாட்டு வைக்கும் போது, முடிவில் என்னவென்றால் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இனிமேல் இந்த இயக்கத்துக்கும் தலைவருக்கும், எனக்கும் உறுதுணையாக இருப்பேன், பக்கப்பலமாக இருப்பேன் என்று ஒரு வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார்.

அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் முதன்மை செயலாளராக நான் தொடருவேன் என்று சொல்லியிருக்கிறேன். நான் ஏற்கனவே பல தடவை சொல்லியிருக்கிறேன். இந்த இயக்கத்துக்கும், இந்த இயக்க தலைமைக்கும் யார் எல்லாம் உழைக்கிறார்களோ, பாடுபடுகிறார்களோ, அவர்களை என் தலைமேல் வைத்து கொண்டாட நான் தயாராக இருக்கிறேன். இயக்க தோழர் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்விற்கு நான் உறுதுணையாக இருப்பேன். இனிமேல் இது போன்ற குழப்பங்கள் இயக்கத்தில் நடக்க கூடாது. இது கட்சிக்கும், தலைவருக்கும் நல்லது அல்ல என்று நான் முடிவு எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ கண்ட கனவுகளுக்கு உறுதுணையாக இருப்போம்: துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அளித்த பேட்டியில், “என்னுடைய அரசியல் முகவரியாக விளங்கி கொண்டிருக்கிற, குடத்தில் இட்ட விளக்காக இருந்த என்னை குன்றில் மேல் இட்ட விளக்காக அழகு பார்க்கும் வைகோ சொன்னது தான் இங்கே நடந்தது. முதன்மை செயலாளர் துரைவைகோ அவர் அந்த பதவியில் நீடிக்க வேண்டும். என்னுடைய நடவடிக்கைகள் காயப்படுத்தியிருக்குமேயானால் நான் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.

நீங்கள் தொடர்ந்து இயக்கத்தை முன்எடுத்து செல்கின்ற முதன்மை செயலாளராக தொடர வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை சொல்லியிருக்கிறேன். அவரும் மறுபரிசீலனை செய்து தொடர்வதாக சொல்லியிருக்கிறார். இணைந்த கைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம். நாங்கள் எப்போதுமே இணைந்து இருக்கிறோம். நானும் துரை வைகோவும் இணைந்து இந்த இயக்கத்தை வைகோ கொண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம்” என்றார்.

* ‘ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும்’
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில், இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமை திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று மதிமுக நிர்வாக குழு விழைகிறது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். எனவே அவரை குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post மல்லை சத்யாவுடனான மோதல் முடிவுக்கு வந்தது ராஜினாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ: வைகோ பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: