சிவகாசி: அரசுப் பள்ளியில் படித்து உச்சநீதிமன்ற நீதிபதியாகியுள்ளேன் என சிவகாசியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் நீதிபதி மகாதேவன் பெருமிதத்துடன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர் கல்லூரியில் 25வது ஆண்டு விழா நேற்று மாலை கல்லூரியின் தாளாளர் சோலைச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் சாதாரணமான அரசு பள்ளியில் தான் எனது கல்வி பயணத்தை தொடங்கினேன். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி எனது வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றேன்.
27 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் அரசு வக்கீலாக பணியாற்றினேன். 11 ஆயிரம் வழக்குகளை நடத்தி உள்ளேன். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றேன். தமிழ் படித்த என்னால் இந்த உயரத்தை தொட முடிகிறது என்றால் நீங்களும் முயற்சித்தால் சாதனைகளை செய்யலாம். வாழ்க்கையின் கடினமான பாதைகளை 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் புலவர்கள் உணர்ந்திருக்கின்றனர். தமிழ் மண் தான் உலகத்துக்கே ஞானத்தை வாரி வழங்கியது. தமிழகத்தில் இருந்த சித்த மருத்துவ கூறுகள், வெளிநாட்டு அறிஞர்களால் எடுத்து ஆளப்பட்டு அவர்கள் மூலமாக அது மருத்துவத்துறையில் கலந்துள்ளது.
நாம் படிக்கும் சிந்தனைகள், தத்துவங்கள் அனைத்தும் மேல்நாட்டு சிந்தனைகள் தத்துவங்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நம் மண்ணிலிருந்து சென்றவை தான் அவை. ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் கற்க வேண்டிய காலத்தில் கற்க வேண்டியதை கற்க வேண்டும். இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post உலகுக்கே ஞானம் வழங்கியது தமிழ் மண்; அரசுப்பள்ளியில் படித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆனேன்: நீதிபதி மகாதேவன் பெருமிதம் appeared first on Dinakaran.