நூறு நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்காததால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு: ஒன்றிய அரசுக்கு விவசாய சங்கம் கண்டனம்


மதுரை: நூறு நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காததால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  அகில இந்திய விவசாயத் ெதாழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றம் மாநில குழு கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற அகில இந்திய தலைவர் பி.வெங்கட், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது தான் ஒன்றிய அரசு என்பதை பாஜவால் ஏற்பதற்கு மனமில்லை. கார்ப்பரேட்-நவபாசிச மற்றும் மதவாத அரசை நடத்தி வருகிறது.

சமூக நலத்திட்டத்திட்டங்களுக்கான நிதியை பெருமளவு வெட்டிச் சுருக்கி விட்டனர். நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு முதலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமானதல்ல. இதை ரூ.2.50 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும். நூறு நாள் வேலை என்பது விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்தது. தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைக்கான கூலியை உயர்த்தி வழங்கவேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட நிதி நிலுவைத்தொகையான ரூ.4,034 கோடியை வழங்குவதில் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறது.

நான்கரை மாதங்களுக்கும் மேலான, இந்த தாமதத்தால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்தியாவில் 30 சதவீத நிலங்கள் ஐந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் குவிந்துள்ளது. எஞ்சியுள்ள 70 சதவீத நிலங்கள் தொழிற்சாலைகளாக, வணிக வளாகங்களாக, குடியிருப்புகளாக மாறிவருகின்றன. தமிழ்நாடு அரசு மனுதர்மம், இந்துத்துவா, கவர்னரின் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நடவடிக்கை பாராட்டிற்குரியது. விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியாக ரூ.6,500 வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி மே 20ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம். இவ்வாறு கூறினார்.

The post நூறு நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்காததால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு: ஒன்றிய அரசுக்கு விவசாய சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: