திருப்பணிகள் முறையாக நடைபெற்றதா? தென்காசி கோயிலில் ஐஐடி குழு ஆய்வு

தென்காசி: ஐகோர்ட் உத்தரவையடுத்து தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சென்னை ஐஐடி குழுவினர், வழக்கறிஞர் ஆணையத்தினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தென்காசியில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்த 9 அடுக்கு ராஜகோபுரத்துடன் கூடிய காசி விஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 7ம் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனிடையே முழுமையாக திருப்பணிகள் நடைபெறாமல் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக கூறி நம்பிராஜன் மற்றும் சிவபாலன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் நம்பிராஜன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 3ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஐஐடி குழுவினர் மற்றும் வழக்கறிஞர் ஆணையத்தினர் கோயிலை முறையாக ஆய்வு செய்து புணரமைப்பு பணிகள் குறித்து முழுமையாக அறிக்கை சமர்ப்பித்த பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மறுநாள் 4ம் தேதி அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் ஐஐடி குழுவினர் மற்றும் வழக்கறிஞர் ஆணையத்தினர் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து, சென்னை ஐஐடி குழுவைச் சேர்ந்த அருண் மேனன், அனுசந்தானம் மற்றும் வழக்கறிஞர் ஆணையத்தின் சார்பில் ஆனந்த வள்ளி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவினர் நேற்று காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோயிலின் ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்த அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்வர் என தெரிகிறது.

The post திருப்பணிகள் முறையாக நடைபெற்றதா? தென்காசி கோயிலில் ஐஐடி குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: