இந்த உத்தரவை துணைஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில்,’ இந்திய ஜனாதிபதியை நீங்கள் வழிநடத்தும் சூழ்நிலை எங்களிடம் இருக்க முடியாது. சில நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுகிறார்கள். 145 (3)ன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே உரிமை. அதற்கும் ஐந்து நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்ட அமர்வு நீதிபதிகள் இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். தன்கரின் கருத்தை மூத்த வக்கீலும், மாநிலங்களவை எம்பியுமான கபில்சிபல் கடுமையாக எதிர்த்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தலை செல்லாது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபோது, ஒரே ஒரு நீதிபதி, நீதிபதி கிருஷ்ண ஐயர் மட்டுமே அந்த தீர்ப்பை வழங்கினார். அவரது தீர்ப்பால் இந்திராகாந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த தீர்ப்பு ஜெகதீப் தன்கரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது அரசுக்கு எதிராக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறதா?.
உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை துணை ஜனாதிபதி ஜெதீப் தன்கர் விமர்சனம் செய்ததை பார்த்து நான் வருத்தமும், ஆச்சரியமும் அடைந்தேன். இதுபோன்ற அரசியல் அறிக்கைகள் எந்த அவைத்தலைவரிடமும் இருந்தும் வந்ததில்லை. நாடு முழுவதும் பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து நடத்தும் நிறுவனம் ஏதேனும் இருந்தால், அது நீதித்துறைதான். ஜனாதிபதி, அமைச்சரவையின் அதிகாரம் மற்றும் ஆலோசனையின்படி செயல்படுகிறார். அவருக்கு தனிப்பட்ட உரிமை இல்லை. இதை ஜெதீப் தன்கர் தெரிந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அதன்பிறகும் சிக்கல்கள் இருந்தால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து ஆலோசனைக் கருத்தைப் பெறலாம். சட்டப்பிரிவு 370 அல்லது ராமஜென்ம பூமி தீர்ப்பு குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று அரசு தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் ஆளுநர் விவகாரத்தில் தீர்ப்பு வந்ததும், உச்ச நீதிமன்றம் இதை எப்படி சொல்லும் என்று சொல்கிறார்கள். உங்களுக்கு பிடிக்காத தீர்ப்பு என்றால் அதுதவறானது. அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிச் சொல்வது சரியல்ல.
மாநிலங்களவை சபாநாயகர் பதவியில் இருக்கும் நீங்கள் எதிர்க்கட்சிக்கும், ஆளும்கட்சிக்கும் இடையே சமமான தூரத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சொல்வது அனைத்தும் சம தூரத்தில் இருக்க வேண்டும். எந்த சபாநாயகரும் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க முடியாது. அப்படித் தோன்றினால் அந்த பதவியின் கண்ணியம் குறைந்துவிடும். இதுபோன்ற அறிக்கைகளை நீங்கள் வழங்கினால், நீதித்துறைக்கு பாடம் கற்பிப்பது போல் தோன்றும். அது நடுநிலையானது அல்ல, நமது அரசியலமைப்புச் சட்டமும் அப்படி இல்லை.
நீதித்துறையை ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் கிரண் ரிஜிஜு, அவை தலைவர் தன்கர் ஆகியோர் இப்படி தொடர்ந்து தாக்கக்கூடாது. இப்படி செய்தால் நீதித்துறை தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது. நீதித்துறையின் சுதந்திரம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையாகும். நீங்கள் பேசுவது அரசியலமைப்பிற்கு எதிரானது. எமர்ஜென்சி பற்றி மட்டும் தன்கர் பேசினார். ஆனால் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பற்றி பேசவில்லை, நிறுவனங்களை கைப்பற்றுவது பற்றி நீங்கள் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்தவற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறார். 2014ம் ஆண்டுக்கு பிறகு நடந்தவை பற்றி பேச மறுக்கிறார்.
கடந்த டிசம்பரில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்தோம். அதில் 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்டனர். இது ஏப்ரல் மாதம். அந்த கையெழுத்துகள் உண்மையானதா இல்லையா என்பதைக் கண்டறிய 5 மாதங்கள் ஆகுமா. இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும்? நீங்கள் அவசரமாக இந்த விஷயத்தை முடிவு செய்யவில்லை என்றால், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது எங்களின் வாதம். கவர்னர் மசோதாக்களை நிறைவேற்றவில்லை என்றால், நீதித்துறை எதுவும் செய்ய முடியாது. எனவே கவர்னர் தனது வேலையைச் செய்யவில்லை என்றால், நீதித்துறை தலையிட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
* மசோதாக்களை நிறுத்தி வைத்து சட்டப்பேரவை அதிகாரத்தின் மீது ஊடுருவியவர் கவர்னர்
கபில் சிபல் மேலும் கூறுகையில்,’ சில நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்பட்டதாக தன்கர் கூறுகிறார். ஆனால் மசோதாக்களை நிறுத்தி வைத்து சட்டப்பேரவையின் அதிகாரத்தின் மீது ஊடுருவியவர் கவர்னர். இது தன்கருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஜனாதிபதியின் அதிகாரங்களை எப்படிக் குறைக்கலாம் என்று அவர் கேட்கிறார். ஆனால் யார் அவரது அதிகாரத்தை குறைத்தது? இது உண்மையில் சட்டப்பேரவை மேலாதிக்கத்தின் மீதான தலையீடு பற்றியது. ஒரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றினால், ஜனாதிபதி காலவரையின்றி அதை நடைமுறைப்படுத்துவதைத் தாமதப்படுத்த முடியுமா?
அவர் அதில் கையெழுத்திடாவிட்டால், அதைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லையா?. ஒரு மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் ஆளுநர் செயல்படுகிறார். எனவே ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது ஆளுநருக்குச் செல்லும், அதை ஆளுநர் கருத்து தெரிவித்து திருப்பி அனுப்பலாம், ஆனால் மீண்டும் நிறைவேற்றினால், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருக்க முடியுமா? இது சட்டமன்றத்தின் மேலாதிக்கத்தின் மீதான ஊடுருவலுக்கு சமம்’ என்றார்.
* 142வது பிரிவு அணுசக்தி ஏவுகணையா?
கபில் சிபல் கூறுகையில்,’ நான் தன்கரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் 142வது பிரிவை அணுசக்தி ஏவுகணை என்று நீங்கள் சொன்னீர்கள், இதை எப்படிச் சொல்வது? 142 வது பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது, அது அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளது, அரசாங்கத்தால் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு, உச்ச நீதிமன்றத்திற்கு முன் இருக்கும் எந்தவொரு விஷயத்திலும் முழுமையான நீதியை உறுதி செய்யும் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது’ என்றார்.
The post துணைஜனாதிபதி அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது இதுவே முதல்முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பை தன்கர் விமர்சனம் செய்வதா? கபில்சிபல் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.