திருப்பதி கோயிலில் தலைமுடி காணிக்கை செலுத்திய பவன்கல்யாண் மனைவி

திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர்(7). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறை பயிற்சிக்காக சென்றிருந்தார். அப்போது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில், 15 மாணவர்கள் காயமடைந்தனர். இதில் பவன் கல்யாணின் மகனுக்கு கை, கால்களில் தீக்காயம், மூச்சு திணறல் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மகனின் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு, பவன் கல்யாண் சிங்கப்பூர் சென்று தனது மகன் மற்றும் மனைவி அன்னா லெஷ்னேவா ஐதராபாத்திற்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அன்னா லெஷ்னேவா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். தனது மகன் சிறு காயத்துடன் உயிர் பிழைத்ததால் ஏழுமலையானுக்கு மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து, இன்று காலை ஏழுமலையானை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற உள்ளார். அன்னா லெஷ்னேவா கிறிஸ்தவர் என்பதால், ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு தலைமுடி காணிக்கை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதி கோயிலில் தலைமுடி காணிக்கை செலுத்திய பவன்கல்யாண் மனைவி appeared first on Dinakaran.

Related Stories: