இந்நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக்ஷா) என்ற திட்டத்தில் 2023-2024ம் ஆண்டில் ஒன்றிய அரசு ரூ.37 ஆயிரத்து 453 கோடி நிதி ஒதுக்கி அறிவித்தது. இருப்பினும் இந்த நிதியில் இருந்து 60 சதவீதத்துக்கு பதிலாக 23.05% தான் மாநிலங்களுக்கு 2019-2020ல் வழங்கப்பட்டது. அதன்படி ரூ.32 ஆயிரத்து 326 கோடியே 82 லட்சமும், 2021-2022ம் ஆண்டில் ரூ.24 ஆயிரத்து 873 கோடியே 18 லட்சமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஸ்ஸாம், பீகார், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த நிதியை பெற முடியவில்லை. இது தவிர 17 மாநிலங்கள் போதிய வசதி இல்லை என்ற காரணத்தாலும், 4 மாநிலங்கள் கழிப்பறை வசதிகள் இன்மையாலும் நிதியை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. தமிழகத்தை பொருத்தவரையில் தமிழகத்துக்கு ஒன்றிய அரசு ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதி வழங்க வேண்டியுள்ளது. இதை தமிழகம் பல முறை கேட்டும் ஒன்றிய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களை ஏற்பதாக அறிவித்து ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்து போட்டால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய கல்வித்துறையின் அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசு செலுத்த வேண்டிய மேற்கண்ட நிதியை ஈடுகட்ட தமிழக அரசு தனது சொந்த நிதி வளத்தில் இருந்து சமக்ர சிக்ஷாவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கிடையே, தடையில்லா கல்வியை உறுதி செய்வதற்காக 2025-2026ல் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46 ஆயிரத்து 767 கோடியை தமிழகம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதற்குப் பிறகும் ஒன்றிய தனது பிடிவாதத்தை கைவிடாமல் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் விவாதம் செய்தும் அதற்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் முறையாக பதில் அளிக்காமல் தமிழக எம்பிக்களை விமர்சனம் செய்தார். இந்த பிரச்னை பெரிய அளவில் வெடித்துள்ளதால் நிதி கிடைக்காது என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது.
இதற்கிடையே, தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு முதல் சட்டப் பேரவையில் கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்ட நிலையில் தமிழக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் உச்சநீதி மன்றம் அந்த வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கி 10 மசோதாக்களுக்கும் தானே முன்வந்து ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, தமிழக அரசு அவற்றை சட்டமாக்கி அரசிதழில் அறிவித்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் தீர்ப்புக்கு பிறகு, ஒன்றிய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியைப் பெற மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது. அதன்படி ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது.
கல்வி நிதியை நிறுத்துவது நியாயமற்றது என்று நாடாளுமன்ற கல்விக்கான நிலைக்குழுவும் கடந்த வாரம் ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன் ெதாடர்ச்சியாக சட்ட நிபுணர்களின் கருத்துரைகளும் வழக்கு தொடர சாதமாக இருப்பதாகவும் தெரிகிறது. அதனால் தமிழக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் கல்வி நிதியை பெற வழக்குத் தொடர்வதும் உறுதியாகியுள்ளது.
* கல்வி நிதியை நிறுத்துவது நியாயமற்றது என்று நாடாளுமன்ற கல்விக்கான நிலைக்குழுவும் கடந்த வாரம் ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
The post ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2152 கோடி கல்வி நிதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு appeared first on Dinakaran.
