×

சூறைக்காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது

கிருஷ்ணகிரி, ஏப்.12: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில், சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரம் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மார்ச் மாத இறுதி முதலே கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெயிலால் மதிய வேளையில் சாலைகளில் போக்குவரத்து குறைந்து, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. இந்நிலையில் கடந்த, மூன்று நாட்களாக காலையில் நல்ல வெயில் அடித்தாலும், பிற்பகல் சுமார் அரை மணி நேரம் லேசாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை வெயில் சுட்டெரித்த போதும், பிற்பகல் 3 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், குந்தாரப்பள்ளி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

பலத்த காற்றுடன் பெய்த மழையில் பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இருந்த பஸ் ஸ்டாப் இடிந்து விழுந்தது. அத்துடன் பூமாலை நகர் பகுதியில் உள்ள மேல்பாலத்தின் கீழ் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டையில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் மீது, அருகிலிருந்த வேப்பமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. மேலும் காவேரிப்பட்டணத்தில் டிரான்ஸ்மார் மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த மழையால் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும் குளிர்காற்று வீசியதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து சாய்ந்தன. சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள், சேலம் மெயின் ரோட்டில் உள்ள மீன் கடைகள், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சிசிடிவி கேமரா கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும், மரங்கள் விழுந்ததில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தது. மேலும், காவேரிப்பட்டணம் நகரத்தின் முக்கிய வீதிகளில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

The post சூறைக்காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை