டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் முதல் இடம் பிடித்து விவசாயி மகள் சாதனை

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியை ஒட்டிய வாழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன்- மாலா தம்பதியின் மகள் கதிர்செல்வி (27). இவர், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த இவர், கடந்த 2023ம் ஆண்டு குரூப்- 4 தேர்வில் வெற்றிபெற்று அதில் கிடைத்த பணிக்கு செல்லாமல் குரூப்-1 தேர்விற்கு கடும் முயற்சியோடு படித்து வந்தார்.

கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை எழுதியிருந்தார். சில தினங்களுக்கு முன் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இத்தேர்வில் கதிர்செல்வி மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அக்கிராம மக்கள் மட்டுமின்றி சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ேடார் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் சாதனை மாணவி கதிர்செல்வியை பாராட்டி வருகின்றனர். மாணவி கதிர் செல்வி கூறுகையில், ‘கடின உழைப்புடன், தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நம்மை தேடி வரும். நான் தேர்வில் சாதனை படைத்ததற்கு காரணம் பல்வேறு செய்முறை தேர்வுகளை தொடர்ந்து எழுதியதுதான்’ என்றார்.

The post டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் முதல் இடம் பிடித்து விவசாயி மகள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: