*46 பேரை அடைத்து வைக்கலாம்
தர்மபுரி : தர்மபுரியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கிளைச்சிறை பெண்கள் சிறையாக மாற்றப்பட்டது. 46 பேரை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. நேற்று வரை 19 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.தர்மபுரி நகரில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கிளைச்சிறை உள்ளது.
இச்சிறைச்சாலை 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 46 கைதிகள் அடைத்து வைக்கும் வகையில் இச்சிறைச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 19 பெண் கைதிகள் உள்ளனர். தர்மபுரி கிளைச்சிறையில் பெண்கள் தங்க வைப்பதில்லை. ஆண்கள் மட்டுமே அடைத்து வைக்கப்பட்டு வந்தனர்.
தற்போது, பெண்கள் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்யப்படும் பெண்கள் இங்கு தான் அடைக்கப்படுகின்றனர். கொலை குற்றவாளிகள் அடைக்கப்படுவதில்லை. கட்டப்பட்டு 119 ஆண்டுகளாகியும், பழமை மாறாத கட்டிடமாக தர்மபுரி கிளைச்சிறை உள்ளது. கைதிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் அவித்த பயறு வகைகள் வழங்கப்படுகிறது.
கைதிகள் படிக்க தினசரி நாளிதழ்கள், உலக நிகழ்வுகள் தெரிந்து கொள்ள டி.வி. வசதிகள் உள்ளன. கைதிகளின் குறைகள் அவ்வவ்போது கேட்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்படுகிறது. தினசரி அரசு மருத்துவர் சிறைக்கு சென்று கைதிகளிடம் உடல்நலம் விசாரிக்கிறார்.
உடல்நலம் குன்றி இருந்தால், அங்கேயே பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது. கைதிகளை உறவினர்கள் பார்க்க தினமும் காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் அனுமதிக்கப்படுகிறது.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நேரில் பார்க்க அனுமதி இல்லை. 46 பேருக்கு மேல் தர்மபுரி கிளை சிறையில் அடைக்க அனுமதி இல்லை. கூடுதலாக வந்தால், தர்மபுரி மாவட்ட பெண் கைதி மற்றும் குற்றவாளிகள் சேலம், வேலூர் சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்படுகின்றனர்.
இரு மாதத்திற்கு முன்பு வரை தர்மபுரி கிளைச்சிறையிலும், புதியதாக கட்டப்பட்டுள்ள தர்மபுரி மாவட்ட சிறைச்சாலையிலும், ஆண்கள் மட்டுமே அடைக்கப்பட்டு வந்தனர்.
பெண் கைதிகள் சேலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், நேரம் விரயமாகி வந்தது. வீண் அலைச்சசலை தவிர்க்கும் வகையில், தர்மபுரி கிளைச்சிறையை பெண்கள் சிறையாக அரசு மாற்றியுள்ளது. தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்யப்படும் பெண்கள் தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி சோகத்தூர் ரவுண்டானா பதிகால்பள்ளம் அருகே, மாவட்ட சிறைச்சாலை நவீன பாதுகாப்பு வசதியுடன் 3 ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. தற்போது, 250 ஆண்கள் வரை அடைத்து வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறையில், தற்போது சிறை வார்டன் மற்றும் போலீசார் கட்டுப்பாட்டில் முழுமையாக இருப்பதால், கைது செய்யப்படும் ஆண்கள், புதியதாக கட்டப்பட்ட தர்மபுரி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதமாக, தர்மபுரி கிளைச்சறையில் பெண்கள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்திற்கு என்று தனியாக சோகத்தூர் அருகே புதிய மாவட்ட சிறை கட்டப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் இயங்குவதால், அனைத்து ஆண்களையும் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றனர். இதனால், தர்மபுரி கிளைச்சிறை பெண்கள் சிறையாக மாற்றப்பட்டுள்ளது,’ என்றனர்.
The post ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது பெண்கள் சிறையாக கிளைச்சிறை மாற்றம் appeared first on Dinakaran.