அதன்படி, டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முறை கடந்த 2ம் தேதி முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு 26% என பாதி அளவாக பரஸ்பர வரி சுருக்கப்பட்டது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா சராசரியாக 54 சதவீத வரி விதிக்கும் நிலையில், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதால் இந்தியாவுக்கு டிரம்ப் சலுகை வழங்கினார். சீனாவுக்கு 34% வரி விதிக்கப்பட்டது. இந்த பரஸ்பர வரியைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன.
வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தன. டிரம்பின் முடிவு அமெரிக்காவுக்கே ஆபத்தை ஏற்படுத்துவதாக மாறியது. அதே சமயம், சீனா தவிர்த்து பல நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. இந்நிலையில், பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். 75 நாடுகள் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பதாக டிரம்ப் கூறி உள்ளார்.
இதனால் பரஸ்பர வரி நிறுத்தி வைக்கப்பட்ட நாடுகளுக்கு அடிப்படை வரி 10 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பங்குச்சந்தை தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பாக டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியானது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தை ஒரே நாளில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது. நேற்று மட்டும் 2,900 புள்ளிகள் அதிகரித்தன. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவிலிருந்து மீண்டன.
ஆனால் இந்த 90 நாள் நிறுத்தம் சீனாவுக்கு மட்டும் இல்லை என டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு பதிலுக்கு பதில் சீனா வரி விதித்தது. இதனால் சீனாவுக்கு 50% கூடுதல் வரியுடன் மொத்த வரியை 104 சதவீதமாக டிரம்ப் அதிகரித்தார். இதே போல சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரியை 84 சதவீதமாக அதிகரித்தது. இப்படி போட்டா போட்டி போட்டதால் சீனாவுக்கு மட்டும் 90 நாள் வரி நிறுத்தத்தை டிரம்ப் தவிர்த்ததோடு சீன இறக்குமதிகளுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரிப்பதாக அறிவித்தார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் நேற்றைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் நோக்கம் யாருடைய ஆதரவையும் பெறாது. தோல்வியில் முடியும். நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம்’’ என்றார்.
இதனால் டிரம்ப் அறிவிப்பால் ஏற்பட்ட உலகளாவிய வர்த்தக யுத்தம் தற்போது அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக யுத்தமாக மாறியிருக்கிறது. பரஸ்பர வரி நிறுத்தப்பட்டதால், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்குமான 10 சதவீத அடிப்படை வரி கடந்த 5ம் தேதி முதல் அமலாக்கப்பட்டிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
* பதில் வரியை நிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்
பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த டிரம்ப் அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லியென் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உலக பொருளாதாரத்தின் நிலைத்தன்மை நோக்கிய முக்கியமான முடிவு இது. இதை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்றார்.
முன்னதாக, அமெரிக்காவுக்கு பதிலடியாக 25% வரியை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருந்தது. இது குறித்து உர்சுலா கூறுகையில், ‘‘நாங்களும் பதில் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறோம். இந்த 90 நாட்களில் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படாத பட்சத்தில் பதில் வரி நடைமுறைக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.
* அமெரிக்காவில் முட்டை விலை ரூ.46 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 3 கோடிகள் அழிக்கப்பட்டன. இதனால் முட்டை விலை கடுமையாக அதிகரித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒரு டஜன் ரூ.170 ஆக (ஒரு முட்டை ரூ.14) இருந்த நிலையில், ஜனவரியில் ரூ.420 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், தற்போது பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, மொத்த விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சில்லறை விற்பனையில் முட்டையின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் ஒரு டஜன் முட்டை ரூ.550( ஒரு முட்டை சுமார் ரூ.46) ஆக விலை அதிகரித்தது. வரும் 20ம் தேதி ஈஸ்டர் பண்டிகை வரையிலும் முட்டையின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தம்: சீனாவுக்கு மட்டும் 125% ஆக வரி அதிகரிப்பு appeared first on Dinakaran.