சட்டத்தை மதிக்காமல் விருப்பம்போல் செயல்படக்கூடாது அமலாக்கத்துறை சோதனை வழக்கில் டாஸ்மாக் நிறுவனம் தரப்பு வாதம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் நேற்று 2வது நாளாக விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, சோதனையின் போது டாஸ்மாக் பெண் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை. மின்னணு ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் செல்போனில் இருந்த சில தகவல்களை பதிவிறக்கம் செய்து அமலாக்கத் துறை எடுத்து சென்றுள்ளனர். சோதனையின் போது, சில அதிகாரிகளை அமலாக்கத்துறை தூங்கவிடாதது மனித உரிமை மீறிய செயலாகும்.

அமலாக்கத்துறையினர் நீதியின் பாதுகாவலர் இல்லை. அது ஒரு விசாரணை அமைப்புதான். அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது. சோதனையின் போது ரகசியம் எனக்கூறி எந்த விவரங்ளையும் தர மறுத்த அமலாக்கத்துறையினர், சோதனை முடிந்த பின்னர் அறிக்கையை வெளியிட்டதன் நோக்கம் என்ன?. சோதனையை விசாரணையை போல அமலாக்கத் துறை மேற்கொண்டனர் என்று வாதிட்டார். டாஸ்மாக் தரப்பு வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post சட்டத்தை மதிக்காமல் விருப்பம்போல் செயல்படக்கூடாது அமலாக்கத்துறை சோதனை வழக்கில் டாஸ்மாக் நிறுவனம் தரப்பு வாதம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: