ரூ.3.2 கோடி தங்கம் கொள்ளை குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கூலி தொழிலாளி தற்கொலை

பேரணாம்பட்டு: சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியைச் சேர்ந்த நகை கடை அதிபர் சேதன்குமார், கே.ஜி.எப் நோக்கி 3.50 கிலோ எடை கொண்ட ரூ.3.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை காரில் கொண்டு சென்றுள்ளார். பேரணாம்பட்டு வழியாக பத்தலப்பல்லி மலைப்பாதையில் ஆந்திரா எல்லையில் கார் சென்றபோது ஒரு கும்பல் காரை வழிமறித்து நகை கடை அதிபரை தாக்கி தங்க கட்டிகளை கடத்திச் சென்றது.

புகாரின்படி வி.கோட்டா போலீசார் நடத்திய விசாரணையில் கேஜிஎப் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஒருவர் தலைமையில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கவுன்சிலர் உள்பட பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். இதில் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி கிராமத்தை சேர்ந்த குக்கர் தொழிலாளி ஜெயராஜ் என்கின்ற அப்பு(30) என்பவரை 8 வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

இதனை அறிந்த அப்பு மனம் வேதனை அடைந்து பேரணாம்பட்டு குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள கொண்டமல்லி காட்டில் தூக்குப்போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி, அப்புவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் இந்த குற்ற செயலுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, என்னை வலுக்கட்டாயமாக 2 பேர் தான் கூட்டிச் சென்றார்கள் என்றும், எனது சாவுக்கு காரணம் அவர்கள்தான் என்றும் உறவினர்களிடம் பேசியுள்ளார்.

The post ரூ.3.2 கோடி தங்கம் கொள்ளை குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கூலி தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: