புதுமாப்பிள்ளையை கொன்று நண்பர் தற்கொலை: கேரளாவை சேர்ந்தவர்கள்

கோவை: கேரள மாநிலம் கோழிக்கோடு கருவச்சேரியை சேர்ந்தவர் ஜெயராஜ் (55), அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (45). நண்பர்களான இருவரும் கோவை அருகே துடியலூர் விசுவநாதபுரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். வெள்ளக்கிணர் ரோடு விநாயகர் கோயில் பகுதியில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரும் ஸ்வீட் கடைக்கு வராததால், ஊழியர்கள் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்காததால் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து, துணை ஆணையர் தேவநாதன் கூறுகையில்,“சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்ததில் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். எனவே, ஒருவரை கொன்று விட்டு மற்றொருவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். மகேசுக்கும், பன்னிமடையை சேர்ந்த சதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம்தான் திருமணம் நடந்துள்ளது. புதுமண தம்பதிகள் தனி வீடு பார்த்து செல்ல இருந்துள்ளனர். வீடு கிடைக்கும் வரை மகேஷ் மனைவியை பன்னிமடையில் விட்டுவிட்டு ஜெயராஜுடன் தங்கியிருந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் பணப்பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post புதுமாப்பிள்ளையை கொன்று நண்பர் தற்கொலை: கேரளாவை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: