காஸ் சிலிண்டர் விலை உயர்வு குடும்ப தலைவிகள் கொந்தளிப்பு: மானியம் தருவதில்லை ; ரூ.50 டிப்ஸ் மட்டும் தரணும், ஒன்றிய அரசு வயிற்றில் அடிப்பதாக குற்றச்சாட்டு

சேலம்: நாடு முழுவதும் நேற்று காலை முதல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர். வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, சென்னையில் ரூ.868.50 ஆக காஸ் விற்பனை செய்யப்பட்டது. இந்த காஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து குடும்பத்தலைவிகள் கூறுகையில், ‘‘ஒரு ஆண்டாக சிலிண்டர் விலையை குறைக்காமல் ஒரே விலையில் வைத்திருந்தனர். அதுவும் விலையை குறைக்க வேண்டிய சூழலில் எல்லாம் வரியை ஏற்றிக்கொண்டு, எங்களை ஏமாற்றி விட்டனர். தேர்தல் வந்தால் மட்டும் சிலிண்டர் விலையை குறைப்பேன் என்ற போக்கில் பாஜ அரசு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது (கடந்தாண்டு மார்ச் 8ம் தேதி) சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைத்தனர். தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தநிலையில், 50 ரூபாயை ஏற்றிவிட்டனர். இவர்கள் எங்கள் வாழ்வில் விளையாடுகின்றனர்.

சிலிண்டர் விலை ரூ.868.50 என்றால், எங்களிடம் சிலிண்டர் கொண்டு வந்து போடும் நபர் கூடுதலாக ரூ.50 வரை வசூலிக்கிறார். இதனால், 950 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே சிலிண்டருக்கு அரசு மானியம் தருவதில்லை. வெறுமனே ரூ.39.81 மட்டுமே வரவாகிறது. அதுவும் ஒரு சிலருக்கே இந்த மானியம் கிடைக்கிறது. இதற்கு முன்பெல்லாம் சிலிண்டருக்கான மானியம் ரூ.400 வரை வழங்கப்படும். அதையும் சுருட்டி கொண்டு எங்கள் வயிற்றில் பாஜ அரசு அடிக்கிறது. தற்போது ரூ.50 அதிகரித்திருப்பது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

The post காஸ் சிலிண்டர் விலை உயர்வு குடும்ப தலைவிகள் கொந்தளிப்பு: மானியம் தருவதில்லை ; ரூ.50 டிப்ஸ் மட்டும் தரணும், ஒன்றிய அரசு வயிற்றில் அடிப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: