தமிழ்நாட்டை போல பிற மாநிலங்களிலும் மோடி அரசுக்கு எதிராக கூட்டணி அமைத்து போராட்டம்: மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி

மதுரை: தமிழ்நாட்டைப் போல பிற மாநிலங்களில் கூட்டணி அமைத்து மோடி அரசுக்கு எதிராக போராட வேண்டும் என சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.ஏ.பேபி, மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராமமூர்த்தி மற்றும் மகபூப்பாளையத்தில் உள்ள தூக்கு மேடை பாலு ஆகியோர் சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:மோடி அரசை எதிர்த்து போராடுவதற்காக மாநாட்டின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இப்படத்தில் 2002ல் நடந்த குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் நடித்த நடிகர்கள் மோடி அரசால் மிரட்டப்பட்டு வருகிறார்கள். இது மோடி அரசின் பாசிச எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இதை எதிர்த்து போராட கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைத்து, மக்களுக்காக போராடி வருகிறோம். இக்கூட்டணி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தோற்கடித்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்தது போல இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் மோடி அரசுக்கு எதிராக கூட்டணி அமைத்து போராட வேண்டும். கட்சியின் மத்தியக் குழுவில் 20 சதவீதம் பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மே 20ல் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாட்டை போல பிற மாநிலங்களிலும் மோடி அரசுக்கு எதிராக கூட்டணி அமைத்து போராட்டம்: மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: