பாஜ பிரமுகரின் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி; பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்க சிறப்புக்குழு: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க சிறப்பு குழுவை நியமித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், பாஜ பிரமுகர் வீரசக்தி என பலர் இருந்தனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும். நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதில் பலரும் முதலீடு செய்தனர். பிறகு யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மதுரையைச் சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜக பிரமுகர் வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்தனர். இவர்கள் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர். அவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன் விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது நியோமேக்ஸ் இயக்குநர்கள் தரப்பில், எங்களிடம் உள்ள கோடிக்கணக்கான சதுர மீட்டர் நிலத்தை ஒப்படைத்து விட்டோம். அதை முதலீட்டாளர்களுக்கு நடுநிலையாளர்கள் முன்னிலையில் வழங்க தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது‌.

அப்போது போலீஸ் தரப்பில், இதுவரையில் 23,649 முதலீட்டாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடு பணமாகவோ அல்லது நிலமாகவோ வேண்டுமா என்பதை தெளிவுபடுத்தி, முடிவுக்கு வர வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தார்களின் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப நிலமாகவோ, பணமாகவோ திரும்ப பெற தயாராக உள்ளனர். எனவே, நியோமேக்ஸ் சொத்துகளை பிரித்து கொடுக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படுகிறது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர், பதிவு துறையை சேர்ந்த அதிகாரி, நகர திட்டமிடல் இயக்குநரக அதிகாரி ஆகியோர் இருக்க வேண்டும். முதலீட்டு பணம் விரைவில் திரும்ப கிடைக்கும் வகையில் இந்த குழு செயல்படும். இது குறித்த ஆலோசனைகளை, பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் உள்பட அனைத்து தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post பாஜ பிரமுகரின் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி; பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்க சிறப்புக்குழு: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: