விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவில் நேற்று மாலை துவங்கி இரவு முழுவதும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. விருதுநகரில் அமைந்துள்ள ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் தென் மாவட்ட அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு கடந்த மார்ச் 16ம் ேததி சாட்டுதல் அறிவிக்கப்பட்டது. மார்ச் 30ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் மஞ்சள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். விழாவில் நாட்களில் அம்மனை குளிர்விக்கும் வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் கோயில் கொடிமரத்திற்கு நள்ளிரவு முதல் காலை வரை தண்ணீர் ஊற்றி வந்தனர்.
விழாவில் நேற்று காலை பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை முதல் கோயில் முன்பு நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து தீச்சட்டி எடுத்தல், கயிறு குத்துதல், மொட்டையடித்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரங்கண் பானை சுமத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் மாலை தொடங்கி இரவு முழுவதும் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 51, 101 தீச்சட்டிகளுடன் ரதம் இழுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவில் நாளை(ஏப்.8) மாலை 5 மணியளவில் ஸ்ரீவெயிலுகந்தம்மன், ஸ்ரீமாரியம்மன் சித்திர தேரில் அமர்ந்து ரதவீதிகளில் வலம்வரும் தேரோட்டம் நடைபெற உள்ளது.
The post விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்: நாளை தேரோட்டம் appeared first on Dinakaran.