ஊட்டி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நலத்திட்ட பணிகளை களஆய்வு செய்து வருகிறார். மேலும் முடிவுற்ற வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாள் களஆய்வு பயணமாக அவர் இன்று (5ம் தேதி) செல்கிறார். சென்னையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை வருகிறார். இதைத் தொடர்ந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் சென்று பிளாக் தண்டரில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஊட்டி சென்றடைகிறார். பின்னர் பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். தொடர்ந்து திமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.
பின்னர் இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு மாளிகைக்கு சென்று தங்குகிறார். நாளை (6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை ஊட்டியில் புதிதாக ரூ.164 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் பிற்பகல் 12.30 மணியளவில் கோவைக்கு செல்கிறார். மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் வள்ளி கும்மி நிகழ்ச்சியை பார்வையிடுகிறார்.
The post 2 நாட்கள் களஆய்வு பணிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டிக்கு இன்று பயணம்: ₹164 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கிறார் appeared first on Dinakaran.