சென்னை ஒலிம்பிக் அகடமியில் விளையாட்டு அறிவியல் மையம்: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஒலிம்பிக் அகடமியில் புதிதாக ‘தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம்’ ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஒலிம்பிக் அகடமியின் 3வது தளத்தில் உள்ள இந்த மையத்தில் விளையாட்டு செயல்திறன், உடற்பயிற்சி, உடல் நலன், உடலியல், உளவியல், விளையாட்டு மருத்துவம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் செயல்திறனை மேம்படுத்துவதையும், உடற்பயிற்சி அறிவியலின் மூலம் உடல் நலனை மேம்படுத்துவதையும் இலக்காக கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தவிர, தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.5.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பளுதூக்குதல் பயிற்சி மையம் ஆகியவற்றையும் காணொளி வாயிலாக நேற்று, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, ராஜகண்ணப்பன், சேகர்பாபு, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

 

The post சென்னை ஒலிம்பிக் அகடமியில் விளையாட்டு அறிவியல் மையம்: துணை முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: