கனவுகள் வருவது நல்லது தானா?

?திதி தர்ப்பணம் போன்ற தினங்களில் முதலில் எந்த பூஜையைச் செய்ய வேண்டும்?
– கோபால், திருவனந்தபுரம்.

முதலில் முன்னோர்களுக்கான பூஜையைச் செய்துவிட்டுப் பிறகுதான் தெய்வத்தின் பூஜையைச் செய்ய வேண்டும். திருவள்ளுவர் இதுகுறித்து ஒரு அழகான குறட்பா பாடி இருக்கிறார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

– என்ற திருக்குறள், இல்லறத்தாரின் கடமைகளாக முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர் மற்றும் குடும்பம் என ஐந்திடத்தும் அறநெறி தவறாமல் காத்து நடக்க வேண்டும் என்கிறது. இதில் உள்ள வரிசையைக் கவனித்தால் முதலில் தென்புலத்தார் அதற்குப் பிறகு தெய்வம் என்றுதான் வருகிறது. பலரும் அப்படித்தான் செய்கிறார்கள். அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு, பிறகு வீட்டில் பூஜை செய்து படைத்துவிட்டு சாப்பிடுகின்றார்கள். எனவே முதல் பூஜை முன்னோர்களுக்கே.!

?கனவுகள் வருவது நல்லது தானா?
– கனகவேலன், தர்மபுரி.

எந்த மாதிரியான கனவுகள் வருகின்றன என்பதைப் பொறுத்துத்தான் பதில் சொல்ல முடியும். இதற்கென்று உள்ள சாஸ்திரத்தை சொப்பன சாஸ்திரம் என்று சொல்கிறார்கள். இந்தக் கனவுகள் எதிர் காலத்தில் நடக்கக்கூடிய சில விஷயங்களின் குறி காட்டிகளாகவும் அமைந்திருக்கும். இன்னும் பல நேரத்தில் பல்வேறு விஷயங்களால் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்ற போது அந்த பிரச்னையை எதிர் கொள்ளும் வழிமுறையும் கனவில் கிடைக்கும்.

?கிரக தோஷங்கள் என்ன செய்யும்? அதை நீக்கிக் கொள்ள வழி என்ன?
– சிந்துஜா நந்தகுமார், சென்னை.

ஒரு ஜாதகத்தில் பல்வேறு கிரக தோஷங்கள் இருக்கும். அந்த கிரக தோஷங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை நடை முறையில் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவருடைய ஜாதகத்தில் கல்வி ஸ்தானம் பலம் குறைந்து இருந்தால், அவருக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. படித்தாலும் கவனம் இருக்காது. கல்வி ஸ்தானம் பலம் குறைந்த இவர்கள் தங்களுக்கு படிப்பே இல்லை என்று முடிவெடுத்து விடக் கூடாது. கல்விக்கான அதிதேவதைகளான சரஸ்வதியை வணங்கலாம், தட்சிணாமூர்த்தியை வணங்கலாம், ஹயக்ரீவரை வணங்கலாம்.

இந்த மூர்த்திகளை தியானம் செய்துவிட்டு, முயன்று படித்தால் விஷயங்கள் மனதில் தங்கும். கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிற்சில தடங்கல்கள் இருந்தாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைத்து முன்னேறி விடுவார்கள்.

?வாசற்படியில் ஏன் உட்காரக் கூடாது?
– ஆர்.ரம்யா, மதுரை.

தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலட்சுமியும் வாசம் செய்வது போல, குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்த மில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி எண்ணெய்விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். வீட்டின் தலைவாசலில் இருபுறங்களிலும் விளக்கு ஏற்றி வைப்பது பண்டைய கால வழக்கமாக நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

வீட்டில் குடியிருப் பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் குடும்ப தேவதைகளை வணங்கிச் செல்லுவதற்கு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டன. கோயில் களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டி எப்படி உள்ளே செல்கிறோமோ, அதே போல்தான் வீட்டுவாசல் படிகளைத் தாண்டி உள்ளே செல்லவேண்டும்.

நம் வீட்டின் நிலை வாசல்படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்குதான். அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலைவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது. அது போல், ஒரு போதும் வாசல் படியில் அமரக் கூடாது. வீட்டின் தலைவாசலில் தலை வைத்து படுக்கக் கூடாது, தரித்திரம் ஏற்படுத்தும் என்பார்கள். அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றைச் செய்தால் வீட்டில் தரித்திரம்தான் உண்டாகும் என்பது பெரியவர்கள் வாக்கு.

?ஏழரைச் சனியில் திருமணம் செய்யலாமா?
– ஹேமா சந்திரசேகரன், திருவெள்ளறை.

தாராளமாகச் செய்யலாம். அப்படிச் செய்த பல ஜாதகங்கள் இருக்கின்றன. நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஏழரைச் சனிக்கு ஏன் இப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு ஜாதகத்திலும் சனி ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லி வைத்துப் போய் விட்டார்கள். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. திருமண காலத்தில் ஏழரைச்சனி வந்துவிட்டால் பயப்பட வேண்டியது இல்லை. குரு பலத்தைப் பார்த்து திருமணத்தைச் செய்யலாம். வாழ்க்கை நன்றாக இருக்கும்.

?ஜோதிடம் கைரேகை எல்லாம் ஒன்றுதானா?
– கங்கா, நாகை.

அது எப்படி ஒன்றாக இருக்கும்? தனித் தனி சாத்திரங்கள்தான். ஆனால், சரியான நபர்களைத் தேடி பலன்களைக் கேட்டால் நல்லது. அப்படி திறன் படைத்தவர்கள் கைரேகை பார்த்துச் சொன்னாலும், ஜாதகத்தைப் பார்த்துச் சொன்னாலும் பலன் ஒன்றாகத்தான் இருக்கும்.

?பூமிக்கு என்ன பெருமை?
– கிஷோஷ்குமார், தாராபுரம்.

நம்முடைய பூமிக்கு கர்ம பூமி என்று பெயர். செயல்களைச் செய்வதும் அதன் விளைவுகளை அனுபவிப்பதும் இங்குதான். நீங்கள் புண்ணியம் செய்து சொர்க்கத்திற்குச் சென்றாலும், அந்தப் புண்ணிய பலன்களை அனுபவித்துவிட்டு, மறுபடியும் பூமியில்தான் பிறக்க வேண்டும். நரகத்திற்குச் சென்றாலும் திரும்ப பூமியில் வந்துதான் பிறக்க வேண்டும் என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன. அதே நேரம், நம்முடைய புண்ணிய பாப பலன்களை அறுத்துத் தள்ளிவிட்டு பிறவா நிலையை அடைவதற்கும் இந்த பூமிதான் உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், தேவர்களுக்கு ஒரு துன்பம் என்றாலும் அதற்குப் பிராயச்சித்தமாக அவர்கள் தேவலோகத்திலும் மற்ற லோகத்திலும் பிராயச்சித்தம் செய்ய முடியாது.

பூமியில் வந்துதான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதனால்தான் பல கோயில்கள் தேவர்களால் கட்டப்பட்டதாக பூமியில் இருக்கின்றன. சொர்க்கத்திலோ மற்ற உலகங்களிலோ கோயில்கள் இருப்பதாக புராணங்களில் இல்லை. எனவே மற்ற உலகங்களில் இருந்து ஒருவன் பிறவா நிலையை அடைய முடியாது பூமியில் இருந்துதான் பிறவா நிலையை அடைய முடியும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்று வள்ளுவர் இந்த பூமியில் உள்ளவர்களுக்குத்தான் சொல்லி இருக்கின்றார்.

நம்மாழ்வாரும் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று இந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் எம்பெருமானின் திருவருளைப் பெற்று வைகுந்தத்தில் போக முடியும் என்று பாடி இருக்கின்றார். வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, நவராத்திரி போன்ற உற்சவங்களும் இந்த பூமியில் தானே கொண்டாடப்படுகின்றன. இந்தப் பெருமை பூமிக்கு மட்டும்தான் இருக்கிறது.

?சனி பகவானுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?
– ஹரிஹர சுப்ரமணியன், ஸ்ரீரங்கம்.

நவகிரகங்களில் சனிக்குத் தான் எல்லோரும் பயப்படுகிறார்கள். அதனால்தான் அவருக்கு பகவான் பட்டமும் சனீஸ்வரன் என்கிற ஈஸ்வர பட்டமும் தந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர் சனீஸ்வரன் அல்ல, சனைச்சரன். அதாவது மெதுவாகச் செல்பவன் என்று பொருள். ஒரு கால் ஊனமுற்றவராக சித்தரிக்கப் படுவதால் மெல்ல நடப்பவராக கருதப்படுகிறார். அதனால்தான் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வதற்கு காலம் எடுத்துக் கொள்கிறார். இந்தக் கதைகள் எல்லாம் சனியின் காரகத்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. சனி பலமாக இருந்தால் அவர் சனிக்கு உரிய காரகத் துவத்தைப் பெற்றிருப்பார். சனியின் காரகங்களான தாமச குணம் கட்டாயம் அவருக்கு இருக்கும்.

சுறுசுறுப்பில்லாமல் இருப்பார். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார். செயல்களில் ஊக்கம் இருக்காது. அதனால் முன்னேற்றம் எளிதில் கிடைக்காது. இந்தக் குணத்தை மாற்றிக் கொள்வதோடு சனியின் தோஷத்தைக் குறைப்பதற்கு, வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவ வேண்டும். இது சனி பிரீதியாக அமையும். சனிக்கிழமை அன்று எள் கலந்த சாதத்தை, காக்கைக்கு வைப்பதன் மூலம் இந்த தோஷம் குறையும். குலதெய்வத்தையும் முன்னோர்கள் வழிபாட்டையும் தவறாமல் செய்வதன் மூலம் சனி தோஷம் பெருமளவு குறையும்.

?ஹயக்ரீவர் உபாசனைக்கு ஏதாவது மந்திரம் இருக்கிறதா?
– சுபஸ்ரீ, கோபிசெட்டிபாளையம்.

ஹயக்ரீவர் காயத்ரியைச் சொல்லலாம். இன்னொரு ஸ்லோகம் ஒன்று இருக்கிறது. இது தினசரி காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி வைத்துச் சொன்னால் ஹயக்ரீவரின் பூரண அருள் கிடைக்கும். வருடத்திற்கு ஒருமுறை கடலூருக்கு அருகில் திருவஹிந்திரபுரத்தில் உள்ள ஹயக்ரீவர் சந்நதிக்குச் சென்று தரிசனம் செய்து வாருங்கள், சகல வித்தைகளும் வசப்படும் நல்வாழ்வு கிடைக்கும். இனி ஹயக்ரீவர் ஸ்லோகம்.

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ் மஹே’’.
(பொருள்: ஞானம் மற்றும் ஆனந்தம் வடிவான தேவனும், தூய்மையான, பளபளக்கும் ஸ்படிகம் போன்ற வடிவமும் அனைத்து அறிவுகளுக்கும் ஆதாரமுமான ஹயக்ரீவரை வணங்குகிறோம்)

?தசவித தீபங்கள் என்கிறார்களே, அது என்ன தசவித தீபங்கள்?
– லதா ராமநாதன், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

தீபங்களை 10 விதங்களில் ஏற்றலாம்.

1. தரையில் வரிசையாக ஏற்றலாம்.

2. கோலம் போட்டு அதில் அகல்களை வட்டமாக வைத்து ஏற்றலாம்.

3. ஏதேனும் சித்திரம் வரைந்து அந்த சித்திரத்திற்கு தகுந்தபடி தீபங்களை வைத்து ஏற்றலாம்.

4. மாலை வடிவில் தீபங்களை ஏற்றலாம்.

5. கீழிருந்து மேலாக அடுக்கு தீபங்களை ஏற்றலாம்.

6. வீட்டின் மேல் முற்றத்தில் ஆகாச தீபம் ஏற்றலாம்.

7. ஜலத்தில் மிதப்பது போல் தீபம் ஏற்றலாம். ஜல தீபம் என்று பெயர் வடநாட்டில் போடும் ஆறுகளில் இப்படி ஜல தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு.

8. ஓடம் போல் செய்து அதில் தீபம் வைத்து ஜலத்தில் விடலாம்.

9. கோயில் கோபுரங்களில் தீபங்கள் ஏற்றலாம். சில கோயில்களில் மோட்ச தீபம் என்று ஏற்றுவார்கள்.

10. வீடு முழுவதும் தீபங்களால் விசேஷ நாட்களில் அலங்கரிக்க வேண்டும்.

இப்படி 10 விதங்களில் தீபங்களை ஏற்றலாம்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post கனவுகள் வருவது நல்லது தானா? appeared first on Dinakaran.

Related Stories: