திருப்பாவை எனும் தேனமுதம்

இரண்டாம் பாசுரத்தின் தொடர்ச்சி…

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று சொல்லும்போது தாயார் சொல்லக் கூடியது என்னவெனில், நம்முடைய அகங்காரம் இரண்டு வகையாக வெளிப்படலாம். அத்யாத்மமாக ஒரு வழியில் செல்லும்போது, சில தரிசனங்களும் அனுபவங்களும் கிடைக்கும். சில விஷயங்கள் தெரியும். இது எல்லாமுமே ஆச்சார்யனின் அனுக்கிரகத்தினால் கிடைக்கின்றது. இது எல்லாமே குரு நமக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். இவை அனைத்துமே பகவானின் காருண்யத்தினால் நடக்கின்றது என்று அதை அனுபவிக்க வேண்டுமே தவிர, நான் பக்குவமாகி விட்டேன். நான் மோட்சத்திற்கு உரியவனாகி விட்டேன் என்று இவனாக நினைத்துக் கொள்ளக் கூடாது. ஆச்சார்யன் நம்மை மோட்சத்தில் சேர்ப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. உறங்கா வில்லிதாசருக்கு எம்பெருமான் காண்பித்துக் கொடுக்கிறார் அல்லவா?

பகவானை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால், அது அகங்காரமாக மாறி விடக் கூடாது. தன்னைத்தானே பக்குவ ஆத்மாவாக நினைத்துக் கொண்டு, நான் ஞானமடையப் போகிறேன் என்று மயங்கி இருக்கக் கூடாது. மிக உயர்ந்த அனுபவங்கள் கிடைத்தால் கூட, அந்த அனுபவங்களை குருவினுடைய காருண்யமாக நினைத்து அனுபவித்துக் கொள்ள வேண்டுமே தவிர, தன்னைத்தானே பக்குவ ஆத்மாவாக நினைத்துக் கொள்வது தகாது. நெய்யுண்ணோம் என்கிற வார்த்தையின் பொருளாக இங்கு என்ன காண்பித்துக் கொடுக்கப்படுகிறதெனில், உயர்ந்த பக்குவமுற்ற ஆத்மா என்பதையே காண்பிக்கப்படுகின்றது.

வையத்து வாழ்வீர் காள் என்று அழைத்து விட்டேன். உன்னை நீயே நெய் என்று நினைத்துக் கொள்ளாதே. நாமே நம்மை நெய்யென்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதாவது பக்குவமுள்ளன் என்று நினைக்க வேண்டாம். ஆச்சார்யனின் மீதான நம்பிக்கையே போதும். அதுவே சரியானது.

எந்த அகங்காரத்தை விட வேண்டுமென்று உள்ளே செல்கிறோமோ, அந்த அகங்காரம் அங்கு கூடி விடுகின்றது. தாயார் நெய்யுண்ணோம் என்கிற வார்த்தையின் மூலமாக காண்பித்து கொடுக்கக் கூடியது என்னவெனில், நாம் எல்லாவற்றையும் பகவத் அனுக்கிரகமாக ஆச்சார்ய அனுக்கிரகமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம்மை நாமே உயர்ந்த பக்குவிகளாக நினைத்துக் கொள்ளக் கூடாது. இன்னொரு விதமான அகங்காரமும் உண்டு. எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு பக்குவமே இல்லை. நான் இதற்கு லாயக்கே இல்லை என்று தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளும் நிலைக்குப் போய் விடுவான். அப்படி போகும் நிலையையும் தாயார் தடுக்கின்றாள். பாலுண்ணோம் என்பது இதைத்தான் குறிக்கின்றது. நம்மை நாமே பக்குவம் என்று சொல்லிக் கொள்வது எப்படி அகங்காரம் ஆகுமோ, அதேபோன்று தன்னைத்தானே பக்குவம் இல்லை என்று சொல்வதும் அகங்காரத்தின் வேறொரு நிலையே ஆகும். இந்த இடத்திற்கு சரியான உதாரணம் என்னவெனில், உறங்காவில்லிதாசன் எழுந்திருந்து போகையில் எம்பெருமானார் கைபிடித்து உட்கார வைக்கிறார். உறங்காவில்லிதாசன், என்னால் எப்படி சரணாகதி செய்ய முடியும் என்று சொல்லும்போது எம்பெருமானார் கை பிடித்து உட்கார வைக்கிறார். முதல்நிலையில் ஆச்சார்யானை நம்பாமல் தன்னைத்தானே நம்பிக் கொண்டு இருப்பது. இரண்டாம் நிலையில் யாரிடமும் நம்பிக்கை இல்லாமல் ஆகின்றது அல்லவா?

எல்லாருக்கும் பணிவு. ஆச்சார்யானுக்கு பணிவு. பாகவதர்களிடம் பணிவு. இவை எல்லாமுமே நல்லதுதான். ஆனால், அதுவே தாழ்ச்சி உணர்வு ஆயிற்று என்றால் அதுவும் ஒரு அகங்காரம்தான். ஏன் இந்த இரண்டுமே தவறெனில், நம்மை நாமே ஜீவாத்மாவாகத்தான் பார்க்கிறோம். தன்னைத்தானே நடுவில் வைத்துக் கொண்டு, தான் என்னவோ பெரிய நிலையில் இருப்பதாகவும், சிறிய நிலையில் இருப்பதாகவும் செயல் புரிகிறது. இரண்டுமே தவறு.
எனவே, நாம் எப்போது நடுவில் நிற்கிறோமோ அப்போது வரையில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அப்போது வரையிலும் இந்த ஜீவாத்மாவானது சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும். உண்மையிலேயே இந்த ஜீவாத்மா சுதந்திரம் கிடையாது. இன்னும் அழகாக வைஷ்ணவ பரிபாஷையில் சொல்வதென்றால், ஜீவாத்மா பரமாத்மா பாரதந்திரியமுடையது. சுதந்திரமுடையது இல்லை. அவன் சேஷி. இவன் சேஷன். இந்த சேஷ பூதத் தன்மையை இன்னும் உணரவில்லை என்று அர்த்தம்.

இப்போது ஆண்டாள் சொல்வதை பாருங்கள். பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி… பரமாத்மாவை நடுவே கொண்டு வா. அவன் தான் பரமன். அப்படி கொண்டு வந்து நிறுத்தி விட்டு, நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்கிறாள், ஆண்டாள். மேலும், பரமாத்மாவை மையமாக வைத்துக் கொள்வதற்கு ஆச்சார்யனின் கையை பிடித்துக் கொள்ள வேண்டும்.

இதிலும் ஒரு வேடிக்கை இருக்கிறது. தாயார் ஸ்ரீவில்லிபுத்தூரையே திருவாய்ப்பாடியாக மாற்றி வைத்திருக்கிறாள். தோழிகளே கோபிகைகள். வடபெருந் திருக்கோயிலே நந்தகோபனுடைய கிரகம். இங்கு நடக்கக் கூடிய விஷயம் அனைத்துமே திருவாய்ப்பாடிதான்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று சொல்லும்போது இவை அனைத்தையுமே ஒருவன் திருவாய்ப்பாடியில் சாப்பிட்டு விடுகின்றான். மிச்சம் இருந்தால்தானே நாம் சாப்பிடுவதற்கு. அதனால், கண்ணனே அனைத்தையும் சாப்பிட்டுவிட்டால் எங்கே மற்றவர்கள் சாப்பிடுவதற்கு.

அதனாலேயே நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று ஆண்டாள் பாடுவதாக வேடிக்கையாகச் சொல்வார்கள்.

(தொடரும்)

The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.

Related Stories: