முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் உபியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: யோகி ஆதித்யநாத் சொல்கிறார்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச அரசு பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுவதாக கூறியிருக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், முஸ்லிம்கள் இந்துக்களிடம் இருந்து மத ஒழுக்கத்தை கற்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.
உத்தரப்பிரதேச பாஜ முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் வெவ்வேறு மொழிகளை கற்றுக் கொள்வது எந்த மாநிலத்தின் முக்கியத்துவத்தையும் குறைக்காது. உத்தரப்பிரதேச அரசு பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

அதனால் உபி எந்த வகையிலும் குறைந்து போய்விட்டதா? சிறுமைப்படுத்தப்பட்டு விட்டதா? உபியில் புதிய வேலைவாய்ப்புக்கான கதவுகள் திறக்கின்றன. வேலைகள் உருவாக்கப்படுகின்றன. மொழியை வைத்து அரசியல் செய்பவர்கள் அதனால் அரசியல் ஆதாயத்தை பெறலாம். ஆனால் அவர்களின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆட்சியில் அவர்களுக்கு வேறு எந்த பிரச்னையும் கிடைக்காததால், மக்களின் உணர்ச்சியை தூண்டி குறுகிய அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.

இந்தி மதிக்கப்பட வேண்டும். அதே சமயம், மும்மொழிக் கொள்கையானது, பிராந்திய மொழிகளும் சமமான மதிப்பை பெறுவதை உறுதி செய்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு பிராந்திய மொழியும் அதன் நாட்டுப்புற மரபுகளையும் கதைகளையும் கொண்டுள்ளது. அவை நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி அதை வலுப்படுத்துகின்றன. இந்தியாவின் பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தை ஒன்றிணைக்கும் காசி தமிழ் சங்கமம் முயற்சி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

நாட்டில் வக்பு வாரியங்கள் சமூகத்திற்கு எதையும் திருப்பித் தராமல், குறைந்தபட்சம் முஸ்லிம் சமூகத்திற்கும் எதையும் கொடுக்காமல் அரசு சொத்துக்களை கையகப்படுத்தும் ஒரு வழிமுறையாக மாறிவிட்டன. எனவே அதில் சீர்த்திருத்தம் காலத்தின் தேவை. உபியில் முஸ்லிம்களிடம் எந்த பாகுபாட்டையும் அரசு காட்டவில்லை. ஆனால் சிறுபான்மையினர் என்பதால் சிறப்பு சலுகைகளை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. சாலைகளில் தொழுகை நடத்தவோ, சட்டவிரோத நடவடிக்கைகளை செய்யவோ முடியாது.

நீங்கள் அவ்வாறு செய்தால் புல்டோசர் நீதியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கும்பமேளாவில் 66 கோடி மக்கள் குவிந்தனர். ஆனால் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் என எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதுதான் மத ஒழுக்கம். இந்த மத ஒழுக்கத்தை இந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் கற்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அதன் மரபிலிருந்து விலகிச் சென்று விட்டது. அக்கட்சி தனது சொந்த மரண சாசனத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் உபியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: யோகி ஆதித்யநாத் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: