×

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுக்களுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 1,1A தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் மே 5 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே, சில மாதங்கள் முன் வெளியிடப்பட்ட ஆண்டு திட்டத்தில் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட ஏழு வகையான தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுகளுக்கான விண்ணப்பம், தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது

அதன்படி, குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு 7 காலியிடங்கள், வணிக வரி உதவி ஆணையர் பணியிடத்துக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 70 பணியிடங்களுக்கான குரூப் 1, 1A தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 15ஆம் தேதி Group 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இதனிடையே, குரூப்-1 கேடரில் இதுவரை தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு குரூப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, குருப்-1 தேர்வுடன் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது.

The post குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Public Service Commission ,Chennai ,TNPSC ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்...