×

தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை: மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்

சென்னை: தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘தற்போதைய சூழல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கானது மட்டுமல்ல. பல்வேறு கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பதால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் நேர்மையான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய நடைமுறை தேவை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது; அது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, ஒருபோதும் தெளிவற்ற தன்மையால் (Opacity) முடக்கப்படக்கூடாது. இந்தத் தருணம் ஏதோ ஒரு தனிப்பட்ட திரைப்படத்தைப் பற்றியது மட்டுமல்ல; ஒரு அரசியலமைப்பு ஜனநாயகத்தில், கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தைப் பிரதிபலிக்கிறது.

சினிமா என்பது ஒரு தனிமனிதனின் உழைப்பு மட்டுமல்ல; அது எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பல சிறு வணிகர்களின் கூட்டு முயற்சியாகும். இவர்களின் வாழ்வாதாரம் ஒரு நேர்மையான மற்றும் காலதாமதமற்ற செயல்முறையைச் சார்ந்தே இருக்கிறது.

தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் முடக்கப்படுகிறது, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன, மேலும் பொதுமக்களின் நம்பிக்கையும் பலவீனமடைகிறது. தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவின் சினிமா ஆர்வலர்கள் கலை மீது மிகுந்த ஆர்வமும், விவேகமும், முதிர்ச்சியும் கொண்டவர்கள்; அவர்களுக்குத் தேவை வெளிப்படைத்தன்மையும் மரியாதையும் ஆகும்.

தற்போது நமக்குத் தேவையானது, தணிக்கை முறைகளில் ஒரு கொள்கை ரீதியான மறுபரிசீலனை ஆகும். தணிக்கைக்கான காலக்கெடுவை வரையறுத்தல், வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வெட்டு (Cut) அல்லது மாற்றத்திற்கும் எழுத்துப்பூர்வமான, தர்க்கரீதியான காரணங்களை முன்வைத்தல் ஆகியவை அவசியமாகும்.

திரைப்படத் துறை முழுமையாக ஒன்றிணைந்து, அரசு நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணமும் இதுவே. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு, அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தும். மேலும், கலைஞர்கள் மற்றும் மக்களின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை இது வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Kamalhassan ,People's Justice Center ,Chennai ,People's Justice Centre ,Kamal Hassan ,
× RELATED பழைய ஓய்வூதிய திட்டம் ஜனவரி 1 முதல்...