ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டியில் வணிக நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றியும், கருப்பு சட்டை அணிந்தும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோடை காலத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கொரோனா காலத்தில் அமல்படுத்தியதுபோன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீலகிரி பதிவெண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டுகளை விட குறைந்ததால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இ-பாஸ் நடைமுறையால் அதிருப்தியில் இருந்த வியாபாரிகள் தற்போது வாகன கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி 29ம் தேதி கருப்பு கொடியேற்றும் போராட்டமும், 2ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி நேற்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் காலை முதல் வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து வந்து, வணிக நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர்.
மாவட்டத்தின் பல இடங்களிலும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள தேயிலை பிரச்சனையை தீர்க்க வேண்டும். கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
சில்லஹல்லா நீர்மின் திட்டத்தை கைவிட வேண்டும். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களது கோரிக்கையை நிறைவேற்றப்படாவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என தெரிவித்தனர்.
The post ஊட்டியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டம் appeared first on Dinakaran.