திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு நடத்தினார்.திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகராகும். எனவே, இங்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி நாட்டு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, திருவண்ணாமலை நகரின் போக்குவரத்து சீரமைப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு போன்றவை மீது தனி கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான, பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று ஆய்வு நடத்தினார். அதையொட்டி, திருவண்ணாமலை டவுன் ஏஎஸ்பி அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், எஸ்பி சுதாகர், ஏஎஸ்பி சதீஷ்குமார் மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, வழக்குப்பதிவு, தொடர் நடவடிக்கைகள், பழயை குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல், கள்ளச்சாராய மற்றும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள், அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் விபரம் குறித்து கூடுதல் டிஜிபி ஆய்வு செய்தார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சமீபகாகலமாக திருவண்ணாமலைக்கு கஞ்சா கொண்டுவரப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்திய கூடுதல் டிஜிபி, ஆன்மிக நகருக்குள் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதோடு, சமீபத்தில் வெளி நாட்டு பெண்ணை சுற்றுலா வழி காட்டி ஒருவர் மலைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினார்.
இங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரின் விபரம் முழுவதும் போலீசுக்கு தெரிந்திருக்க வேண்டும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வெளி நாட்டினரிடம் தவறாக நடக்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல், திருவண்ணாமலை நகரின் போக்குவரத்து சீரமைப்பு, நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள், கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை சப் டிவிஷனில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசுக்கு பராட்டுச்சான்றுகளை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கினார். முன்னதாக, திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியை அவர் நேரில் பார்வையிட்டார். அங்கு, தேவைப்படும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டிஜிபி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.