புதிய டெண்டரில், 21 டன் எடை கொண்ட 3 ஆக்ஸில் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. சங்க உறுப்பினர்களின் பெரும்பான்மை வாகனங்கள் 2 ஆக்ஸில் 18 டன் எடை காஸ் ஏற்றும் வாகனங்களாக இருப்பதால், அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உருவானது. மேலும், வாகனம் விபத்து ஏற்பட்டால், தொடர்ந்து வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு டெண்டரில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமையல் லோடை தாமதாக கொண்டு சென்றால், டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல அறிவிப்புகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன், நேற்று நாமக்கலில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய டெண்டரில், பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன. அவற்றை ஆயில் நிறுவனங்கள் மாற்றுவதற்கு மறுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி இன்று முதல் தென் மாநிலங்கள் முழுவதும் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. 6 மாநிலங்களிலும் உள்ள ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயு லோடு ஏற்றப்பட மாட்டாது. நாளை (இன்று) காலை 6 மணி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதனால் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைவார்கள். எனவே ஒன்றிய, மாநில அரசுகள் எங்களின் கோரிக்கையை உணர்ந்து, அதை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஆயில் நிறுவனங்களின் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்: காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.