உடல்நலம் பாதிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி, திருவண்ணாமலை கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது குறித்து வானதி சீனிவாசன் (பாஜ), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), சிவகுமார் (பாமக) ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவண்ணாமலை கோயில்களில் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் இறந்துள்ளனர், இந்த உயிரிழப்பு விபத்தினால் ஏற்படவில்லை, உடல் நலக்குறைவால் ஏற்பட்டுள்ளது. 17 கோயில்களில் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 7,16,187 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல் அன்னதான திட்டம் இரண்டு கோயில்களில் மட்டுமே இருந்தது. தற்போது 11 கோயில்களுக்கு விரிவுபடுத்தி உள்ளோம். 3.5 கோடி பக்தர்களுக்கு வயிற்றுப் பசியை போக்கியுள்ளோம்.

இதற்காக தமிழக அரசு ரூ.120 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த காலத்தை விட தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 25% அதிகமாகியுள்ளது. இதற்கு நாங்கள் செய்துள்ள கூடுதல் ஏற்பாடுகள்தான் காரணம். திருச்செந்தூர் கோயில் திருப்பதிக்கு இணையாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர் வானதி சீனிவாசன் பழனி கோயிலுக்கு சென்று பாருங்கள். வானதி சீனிவாசன் பேசும்போது, இறந்து போன பக்தர்களுக்கு நிதி உதவி கேட்பார் என எதிர்பார்த்தேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பே முதல்வர் என்னை அழைத்து அவர்களுக்கு நிதி உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் திருவண்ணாமலை கோயில் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது உறுப்பினருக்கு நன்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post உடல்நலம் பாதிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: