உணவுக்கு முன்னும் பின்னும்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் சாந்தி காவேரி

முறையான உணவுப் பழக்கம் என்பது சாப்பிடும் உணவையும், அதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் மட்டும் குறிப்பதல்ல. இரண்டு உணவு நேரத்துக்கான இடைவேளையில் நாம் என்ன உண்கிறோம் என்பதும்தான். அதுபோன்று, செரிமானம் என்பது நாம் சாப்பிட்ட பிறகு தொடங்கும் செயல் அல்ல, ஒரு உணவைப் பார்க்கும்போதோ அதன் வாசனையை உணரும்போதோ அல்லது பிடித்த உணவைப் பற்றி நினைத்தவுடனே, நம் வாயில் உமிழ்நீர் சுரக்கும்போதோ ஆரம்பித்துவிடுகிறது.

அடுத்ததாக உணவு சாப்பிட்டதும், வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவைச் சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றிக் கொடுக்கும் பணியைச் செய்கிறது. எனவே, உண்ணும் நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதும் மிகவும் கவனிக்கப்பட வேண்டும் என்கிறார் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி.

தண்ணீருக்குத் தடை

வயிற்றின் அமிலத்தன்மையானது ஒன்றரையிலிருந்து முன்று பி.ஹெச் வரை இருக்கும். இந்த அளவில்தான் உணவானது அமிலத்துடன் சேர்த்து நன்றாகச் செரிக்கப்படும். ஆனால், சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிற்றில் செரிமானத்துக்கு தயாராக இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும். இதனால், வயிற்றில் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது, விக்கலோ அடைப்போ ஏற்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கலாம்.

சாப்பிட்ட பிறகு, வெந்நீர் குடிப்பது சிறந்தது. உணவுக்கு பின் பழம் உண்ணலாமா உணவு செரிக்கப்படும் விதமும் பழங்கள் செரிக்கப்படும் விதமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் பின்பும் பழங்கள் சாப்பிடக்கூடாது, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டவுடன் பழங்களை எடுத்துக் கொண்டால், உணவில் உள்ள கார்போஹேட்ரேட்டுடன் பழத்திலுள்ள சர்க்கரையும் சேர்த்து, சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். இவர்கள், சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்னரும் சாப்பிட்டபின் இரண்டு மணி நேரம் கழித்தும்தான் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கப் டீ ஒகே வா

சாப்பிட்டவுடன் ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பது நிறைய பேருக்கு பிடித்த விஷயம். டீ மற்றும் காபியில் உள்ள டானின், காஃபைன் போன்ற பொருள்கள், நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடுவதால், ஏற்படும் புத்துணர்ச்சிதான் இதற்கு காரணம். ஆனால், சாப்பிட்டவுடன் டீ குடிக்கும்போது டீயானது, உணவிலுள்ள புரத மூலக்கூறுகளைக் கடினமாக்கி அதை செரிமானம் அடையவிடாமல் செய்துவிடும். இதிலுள்ள பாலிபினால் போன்ற வேதிப் பொருள்கள் இரும்புச்சத்துடன் சேர்வதால், உடலால் இரும்புச்சத்தைக் கிரகிக்க முடியாது. இதனால், ரத்தசோகை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சாப்பிடுவதற்கும் டீ குடிப்பதற்கும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவேளை இருக்க வேண்டும்.

சாப்பிட்டவுடன் குளிக்கலாமா?

காலையில் வெந்நீரில் குளித்த உடன், சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை இரண்டுமே தவறானவை. உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்தஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்குதான் செல்ல வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிர்ச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும். சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்தஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப்பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

ஓட்டமும் நடையும் வேண்டாம்

சாப்பிட்டவுடன் நடப்பது, உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல. இதனால், வயிற்றுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, செரிமானக் குறைபாடு ஏற்படும். அசிடிட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து, 10 நிமிடங்கள் மெதுவாக நடப்பது நல்லது. உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ, சாப்பிட்ட இரண்டுமணி நேரத்துக்குப் பின்போ செய்யலாம்.

குட்டித் தூக்கம் சரிதானா

சாப்பிட்டவுடன் ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்றுபகுதிக்குச் செல்வதால், மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால், மூளை மந்தமாவதால், தூங்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சாப்பிட்டதும், படுக்கும்போது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்த உணவானது, உணவுக்குழாய் வழியாகத் தொண்டைப் பகுதிக்கு மேல்நோக்கி வரும். உணவின் அமிலத்தன்மையால் உணவுக்குழாய் அரிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும், நாம் படுக்கும்போது வயிற்றில் உள்ள உணவானது, உதரவிதானம் பகுதியில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துவதால், குறட்டை பிரச்னை ஏற்படுவதோடு தூக்கமின்மையும் வரும். எனவே, சாப்பிட்டதும் குறைந்தது இரண்டுமணி நேரம் கழித்துதான் தூங்கச் செல்ல வேண்டும்.

The post உணவுக்கு முன்னும் பின்னும்! appeared first on Dinakaran.