டிராக்டர்-பள்ளி வேன் மோதல் எல்கேஜி மாணவன், பெண் பலி: மேலும் 4 குழந்தைகள் படுகாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நர்சரி படிக்கும் 9 சிறார்களை நேற்று மாலை 3.30 மணியளவில் பள்ளி வேன் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. சந்துரு (22) என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி -சென்னை சாலையில் வி.ஐ.பி., நகர் அருகில் சென்றபோது, முன்னால் எம்.சாண்ட் லோடு ஏற்றி சென்ற டிராக்டர் திடீரென நின்றுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில், குழந்தைகள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கதறித் துடித்தனர். அருகிலிருந்தவர்கள், அவர்களை மீட்டனர்.

தகவலறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் படுகாயமடைந்த குழந்தைகள் அனைவரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே எல்.கே.ஜி., மாணவனான போகனப்பள்ளியைச் சேர்ந்த செல்லதுரை மகன் ஹர்னிஷ்(4) உயிரிழந்தான். அதேபோல், டிராக்டரில் சென்ற பெரியமோட்டூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயா(45) சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், 4 குழந்தைகளும் படுகாயமடைந்தனர். வேன் டிரைவர் சந்துரு, மற்றும் 4 குழந்தைகள் லேசான காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

The post டிராக்டர்-பள்ளி வேன் மோதல் எல்கேஜி மாணவன், பெண் பலி: மேலும் 4 குழந்தைகள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: